நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவை நீக்குவதே உழவர்களைக் காப்பாற்றும்
பைல் படம்
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கான ஆன்லைன் பதிவை எளிதாக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆணையிட்டிருக்கிறது. உழவர்களின் பிரச்சினைகளை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அதற்கான பயனற்ற தீர்வுகளை நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவிப்பது உழவர்கள் நலனைக் காக்க எந்த வகையிலும் உதவாது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதி தொடங்கி, அடுத்த செப்டம்பர் 30-ஆம் தேதி நிறைவடையும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி நேரடி நெல் கொள்முதல் பருவம் தொடங்கிய போதே, நெல் கொள்முதலுக்கு புதிய கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்தது. அதன்படி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க விரும்பும் உழவர்கள், நெல் பயிரிடப்பட்ட நிலத்திற்கான 'அடங்கலை' கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதைக் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்து, டோக்கன் பெற்று, அதில் குறிப்பிடப்பட்ட நாளில் தான் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியும்.
இந்த நடைமுறை உழவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதால், இதை மாற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. உழவர் அமைப்புகள் இந்த முறையை மாற்றும்படி வலியுறுத்தினார்கள். இத்தகைய சூழலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மண்டல மேலாளர்களுக்கும், அவர்கள் வழியாக கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இனி உழவர்கள் ஆன்லைன் பதிவை தாங்களே செய்யத் தேவையில்லை என்றும், அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள பட்டியல் எழுத்தரிடம் கொடுத்து ஆன்லைன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவும் உழவர்களின் அடிப்படைப் பிரச்சினையை தீர்க்காது என்பது அரசு உணர வேண்டிய உண்மை.
தமிழகத்தின் கிராமப்புற உழவர்கள் வெகு தொலைவில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த நடைமுறைச் சிக்கலை இந்த அறிவிப்பு போக்கும். ஆனால், உழவர்களின் அடிப்படைப் பிரச்சினை இது அல்ல. குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் உழவர்களிடம், முன்பதிவுக்கான ஆவணங்கள் இருக்காது என்பது தான் அடிப்படை சிக்கலாகும்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சிறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தால் தான் அவர்களுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்கும். இதுவரை நடைமுறையில் இருந்த முறைப்படி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், புதிய முறைப்படி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டுமானால் அதற்குத் தேவையான அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் இவர்களிடம் இருக்காது.
நெல் பயிருக்கான காப்பீடு யார் பெயரில் செய்யப்படுகிறதோ, அவர்கள் பெயரில் தான் அடங்கல் வழங்கப்படும். ஒரு விவசாயி நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாலும், காப்பீடு என்பது பல்வேறு காரணங்களால் நில உரிமையாளரின் பெயரில் தான் இருக்கும். அதனால் நில உரிமையாளர் பெயரில் தான் அடங்கல் பெற முடியும். அதை வைத்துக்கொண்டு சாகுபடி செய்த உழவர், நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாது. அதனால் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் குவிண்டாலுக்கு 400 ரூபாயும், ஏக்கருக்கு 10,000 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது. அதனால், புதிய முறை காரணமாக குத்தகை விவசாயிகள் கடுமையான நிதி இழப்புக்கு ஆளாவார்கள்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய முறையில், சிக்கல் என்பது குத்தகை விவசாயிகளால் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று ஆன்லைன் பதிவு செய்ய முடியாது என்பது தானே தவிர, ஆன்லைன் பதிவு செய்வதற்கான வசதி அல்ல. இதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டும் தான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, ஏற்கனவே இருந்த முறையில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் வணிகர்கள் வெளி இடங்கள், வெளி மாநிலங்களிலிருந்து நெல்லை வாங்கி வந்து கொள்முதல் நிலையங்களில் விற்பதைத் தடுக்க மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து நெல் மூட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதன்மூலம் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் மட்டுமே நெல் விற்பதை உறுதி செய்ய முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu