பழைய ஓய்வூதியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
பைல்ல படம்
மதுரையைச் சேர்ந்த அமீர் ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் தேனியில் வேளாண் துறையில் 2002-ல் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக பணியில் சேர்ந்தேன். 2005-ல் அந்த பணியிலிருந்து விலகி மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவு அலுவலர் பணியில் சேர்ந்தேன். பின்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சார் பதிவாளரானேன்.
நான் பணியில் சேர்ந்த 2002-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் இருந்தது. 2003-ல் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நான் 2002-ல் பணியில் சேர்ந்ததால் என்னை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்குமாறு 2016-ல் கணக்காயர் ஜெனரலுக்கு மனு அனுப்பினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனவே, எனது பெயரை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரர் வேளாண் துறை பணியைச் சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் அரசு பணியாளர்களுக்கான பயிற்சியை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் அவர் தற்காலிக பணிக்காலத்தை பூர்த்தி செய்து விட்டதாக அறிவிக்கப்படவில்லை. இதனால் அவரை நிரந்தரப் பணியாளராக கருத முடியாது.
மத்திய அரசு பணியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு அவரது ஊதியத்தில் பணம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர் மாநில அரசுப் பணியில் சேர்ந்தபோது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு தன்னை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணிக் காலத்தை ஓய்வூதிய கணக்கில் எடுக்க வேண்டும். பணி நிரந்தரம் அறிவிக்கப்படாததை ஓய்வூதிய கணக்குக்கான தகுதியிழப்பாக கருத முடியாது. மனுதாரர் பவானிசாகரில் அளிக்கப்பட்ட பயிற்சியை முழுமையாக முடிக்கவில்லை என்பதை ஏற்க முடியாது. இதனால் அந்தப் பணிக்காலத்தை ஓய்வூதியத்துக்கு எடுக்கமாட்டோம் என்பது சரியல்ல.
அரசு ஊழியர் ஒருவர் ஒரு அரசு பணியிலிருந்து இன்னொரு அரசு பணியில் சேர்வதற்காக அளிக்கப்படும் ராஜினாமாவை தொழில்நுட்ப ராஜினாமாவாக கருத வேண்டும்.மனுதாரர் மத்திய அரசு பணியில் சேர வேளாண் துறை பணியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் மனுதாரரின் வேளாண் துறை மற்றும் மத்திய அரசு பணிக் காலத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த நடைமுறையை 12 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu