கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் காமெடி செய்த அதிகாரிகள்
பைல் படம்.
பாலீதீன் பொருட்கள் அனைத்தையும் தயாரிக்க அனுமதி வழங்கும் அரசு அதனை பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாதந்தோறும் பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அதனை அகற்றவும், மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும் ஒவ்வொரு உள்ளாட்சிகளும் தகுதிக்கு ஏற்ப சில லட்சங்கள் முதல் பல கோடிகள் வரை செலவிட்டு வருகின்றன. பாலீதீன் பைகள் உட்பட அத்தனை பொருட்கள் தயாரிப்பையும் ஒரே சொடக்கில் தடை விதித்தால் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் அதனை செய்ய தமிழக அரசும், மத்திய அரசும் தயாராக இல்லை.
இந்த கதை தான் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி கடத்தப்படுவதிலும் நடைபெறுகிறது. ரேஷன் கடைகளில் இருந்து அரிசி முறைகேடாக கடத்தப்படுவதை தடுத்தாலே, ரேஷன் பணியாளர்களிடம் உயர் அதிகாரிகள் லஞ்சம், மாமூல் வாங்காமல் முறையான நிர்வாகம் செய்தாலே அரிசி கடத்தல் 100 சதவீதம் முடிவுக்கு வந்து விடும். அதனை செய்யாமல், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கிறார்களாம். இதற்கு தமிழக- கேரள அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடத்துகிறார்களாம். குமுளியில் அரிசி கடத்தல் தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டல சிவில்சப்ளை கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக்கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், கட்டப்பணை துணை கண்காணிப்பாளர் நிஷாத்மோன், இன்ஸ்பெக்டர் ஜோபின்அந்தோணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தமிழகம்-கேரளா இடையே பல சோதனைச்சாவடிகள் இரு அரசுகளின் சார்பிலும் உள்ளன. தமிழக அரசு சோதனைச்சாவடிகளில் லஞ்சம், மாமூல் வாங்கிக் கொண்டு அரிசியை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கேரள சோதனைச் சாவடிகளில் அரிசி கடத்தலை ஊக்குவிக்கின்றனர். தெரிந்தாலும் தடுப்பதில்லை. இந்நிலையில் இப்படி ஒரு ஆலோசனைக்கூட்டம் நடந்தது பெரிய காமெடி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu