தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்  முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
X

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு, முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு திறக்கப்படும் தண்ணீரை திறக்கும் ஷட்டர் பகுதியில்,  ஆய்வு நடத்தினர்.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியை எட்டியுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று அதிகாலை 3.55 மணிக்கு, 142 அடியை தொட்டது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி ரூல்கர்வ் முறையில், இன்று முதல் அணையில் 142 அடி தேக்கலாம் என்பதால், கூடுதலாக வரும் உபரிநீரை முழுவதும் கேரளா வழியாக அதிகாரிகள் திறந்து விட்டு வருகின்றனர். இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, அணைக்கு நீர் வரத்து 7 ஆயிரம் கனஅடியை எட்டியது. அவ்வளவு நீரும் தமிழகம் மற்றும் கேரளா வழியாக வெளியேற்றப்பட்டு, அணை நீர் மட்டம் 142 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல முதன்மை பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் தலைமையில் உயர் அதிகாரிகள் குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட பின்னர், 2014ம் ஆண்டு முதல் முறையும், 2015ம் ஆண்டு இரண்டாம் முறையும், 2018ம் ஆண்டு மூன்றாம் முறையும், தற்போது நான்காவது முறையும் நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணை நீர்மட்டம் 142 அடியை எட்டிள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று மாலை இவர்கள் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாட ஒன்று திரண்டு வருகின்றனர். இதனால் கேரள எல்லையோரம் உள்ள கூடலுார், லோயர்கேம்ப், குமுளி பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்