வனப்பாதையில் கடை: வனத்துறை கை விரிப்பு..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் நுழைவுப்பாதை. இடம்: வத்திராயிருப்பு
சதுரகிரி மலைக்குச் செல்லும் மலைப்பாதையில் கடைகள் வைப்பதற்கு அனுமதி தர முடியாது என்று வனத்துறை மறுத்துள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்த மலைவாழ் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர வழி காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
மலையடிவாரங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் ஆடு, மாடுகள் மேய்த்தல், மூலிகை பொருட்கள் சேகரித்தல் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்குச் செல்லும் பாதையில் தற்காலிக கடைகள் அமைத்து தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் விற்க கடைகள் அமைப்பதற்கு வனத்துறை அனுமதிக்க மலைவாழ் மக்கள் கோரினர்.
வனத்துறை அனுமதி மறுத்ததால் ராம் நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மலைப்பகுதியில் குடியேறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வத்திராயிருப்பில் நடந்த பேச்சுவார்த்தை வனத்திற்குள்ளோ, வனத்திற்குள் செல்லும் பாதையிலோ கடைகள் வைக்க முடியாது. தமிழகம் முழுவதும் இந்த வனச்சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது என வனத்துறை திட்டவட்டமாக கூறி விட்டதால், இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. தங்களின் வாழ்க்கைக்கு மாற்று ஆதாரங்களை உருவாக்கித் தர வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வனப்பகுதியில் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் போன்றவைகளுக்கு அனுமதித்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை வனத்துக்குள் வீசிவிட்டு வருவார்கள். மேலும் பிளாஸ்டிக் சார்ந்த உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு அந்த பிளாஸ்டிக் குப்பைகளையும் வனப்பகுதியில் வீசுவார்கள். இதனால் வனப்பகுதி மாசடையும். வனவிலங்குகள் அந்த பிளாஸ்டிக் கழிவுகளில் ஒட்டியுள்ள உணவுப்பொருட்களுக்காக பிளாஸ்டிக்கை உண்ணும் நிலை வரலாம். இதனால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.
அதேவேளை மலைவாழ் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டியதும் அரசின் கடமையாகும். ஆகவே மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும் வன விலங்குகள் பாதிக்காமலும் ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அரசு என்ன செய்ய போகிறது?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu