44 ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்படும் திரைப்படம் 'திரிசூலம்'
![44 ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்படும் திரைப்படம் திரிசூலம் 44 ஆண்டுகளுக்கு பிறகும் பேசப்படும் திரைப்படம் திரிசூலம்](https://www.nativenews.in/h-upload/2023/02/05/1654864-images-4.webp)
பைல் படம்
ஒவ்வொரு வேடத்துக்கும், ஒவ்வொரு படத்துக்கும் அத்தனை மெனக்கெடல்களுடன் அர்ப்பணிப்பைக் கொடுத்து நடிக்கும் நடிகர்திலகம் 200-வது படமான திரிசூலத்திலும் மூன்று வேடங்களில் அசத்தினார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி பெற்றது அதுவரையிலான வசூல் சாதனைகளை முறியடித்தது.
நேர்மையான தொழிலதிபர் ராஜசேகர் (சிவாஜி). அவருக்கு மூன்று பார்டனர்கள். மூவரில் ஒருவர் நம்பியாரென்றால், மூன்று பார்ட்னர்களைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன? கோயில் சிலைகளைக் கடத்தி, வெளிநாட்டில் விற்பனை செய்ய பார்ட்னர்கள் திட்டம் போட, அதை மறுக்கிறார் ராஜசேகர். அப்போது சிலைக் கடத்தல் செய்தவரைக் கொன்று விட, மூன்று பார்ட்னர்களும் போலீஸுக்கு போன் செய்து, ராஜசேகர் கொலை செய்துவிட்டதாகச் சொல்லுகின்றனர். நிறைமாதக் கர்ப்பிணியான சுமதியை அழைத்துக் கொண்டு, ரயிலேறித் தப்பிக்க முனைகிறார் ராஜசேகர்.
ரயிலில் மனைவியை உட்கார வைத்துவிட்டு, குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துவரச் செல்கிறார். அப்போது போலீஸ் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிட்டு தேடுகிறது. மனைவி ஏறி அமர்ந்திருக்கிற ரயிலும் கிளம்புகிறது. போலீஸ் இருப்பதால் ரயிலில் ஏறமுடியாமல் தவிக்கிறார் ராஜசேகர். அங்கே கணவனும் மனைவியும் பிரிகிறார்கள்.
ரயிலில், சுமதியைப் பார்க்கிறார் டாக்டர். அவரின் நிலையறிந்து மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு சங்கர் என பெயரிட்டு கஷ்டப்பட்டு வளர்க்கிறார். இதுவொரு சிவாஜி.
மேஜர் சுந்தர்ராஜன் வக்கீலாக இருக்கிறார். காஷ்மீரில் உள்ள பெண்ணை அடக்கி, அவளைத் திருமணம் செய்து கொள்ள வைத்தால் நீ வியாபாரத்துக்குக் கேட்ட இரண்டு லட்சம் ரூபாயைத் தருகிறேன் என்று தன் மகன் குருவிடம் சொல்கிறார் மேஜர் சுந்தர்ராஜன். இந்த குருவும் ஒரு சிவாஜி. அப்படி அந்தப் பெண்ணை அடக்க வேண்டும் என்று சொல்பவர் சுமதிக்குப் பிரசவம் பார்த்த டாக்டர். இந்த டாக்டர் புஷ்பலதா. வி.கே.ராமசாமியின் பேத்தியான மாலதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீப்ரியா தான் திருமணம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அங்கே, தொழிலதிபர் ராஜசேகருக்கு, யாரோ ஒருவர் அடைக்கலம் கொடுக்க, அதனால் அவர் முன்னேறுகிறார். தன் சொத்துகளையும் தன் மகளையும் ராஜசேகர் பொறுப்பில் விட்டு விட்டு அவர் இறந்து விடுகிறார். அந்தப் பெண்ணும் மாமா மாமா என்று பிரியமாக வளர்கிறார். இவர்தான் நடிகை ரீனா.
ஓவியம் வரைவதில் திறமை கொண்டவர் அம்மா சுமதி. இவர்தான் கே.ஆர்.விஜயா. மூத்த சிவாஜிக்கு மனைவி. தான் ஓவியங்களை வரைந்து கொடுக்க, மகன் சிவாஜி அதை விற்றுக் கொண்டு வருவார். அப்படியொரு முறை ஓவியங்களை எடுத்துக் கொண்டு விற்கச் செல்லும் வழியில், ரீனாவுக்கு குண்டர்களால் ஆபத்து. அப்போது சிவாஜி சண்டையிட்டுக் காப்பாற்றுகிறார். இருவருக்குள்ளும் மலர்கிறது காதல்.
இந்த நிலையில், ஓவியர் ஒருவர், விலையுயர்ந்த நெக்லஸைத் திருடி, ரீனாவிடம் உள்ள ஓவியப் பெட்டிக்குள் மறைத்து வைத்து, காஷ்மீருக்குச் சென்று எடுத்துக் கொள்ளத் திட்டமிடுகிறார். ஆனால், அந்த நகைகள் இல்லாமல் ஓவியம் மட்டுமே காஷ்மீருக்கு வருகிறது. அப்பா சிவாஜியிடம் ஓவியங்கள் கிடைக்கின்றன. மேலும் ரீனா கொடுத்த சிபாரிசுக் கடிதமும் நம்பியார் குரூப்பிடம் கிடைக்க, தன் மகன் ஜெய்கணேஷை அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு, நெக்லஸ் தேடி சிவாஜி வீட்டுக்கு வேலையாளாக அனுப்புகிறார்.
அடங்காமல் இருக்கும் ஸ்ரீப்ரியாவை வழிக்குக் கொண்டு வருகிறார் குரு சிவாஜி. வாடகைக் கணவனாக வந்து நடிக்கும் போது, சிவாஜி செய்யும் லூட்டிகளும் சேட்டைகளும் ஸ்ரீப்ரியாவுக்குள் காதல் பூக்கவைக்கிறது. ஆக, மகன் சிவாஜி இரண்டு பேருக்கும் ரீனா, ஸ்ரீப்ரியா என ஜோடிகள் கிடைக்க... பாவம்... அப்பா சிவாஜிதான் அம்மா கே.ஆர்.விஜயாவுடன் சேரமுடியாமல் தவிக்கிறார்.
இந்தநிலையில், ஜெய்கணேஷ் தன் மகன் என்றும் கே.ஆர்.விஜயா உயிருடன் இருக்கிறார் என்றும் நினைத்துக் கொள்வார் சிவாஜி. அவரிடமே யாரோ மாதிரி வேலைக்குச் சேரும் சங்கர் சிவாஜி, அனைத்தையும் உளவு பார்க்கிறார். ரீனாவுடன் காஷ்மீருக்கு வரும் கே.ஆர்.விஜயாவை நம்பியார் குரூப் அடைத்து வைக்கிறது. அங்கிருந்து தப்பிச் செல்லும் கே.ஆர்.விஜயா, திருமண மண்டபத்துக்குள் செல்கிறார். அங்கே குரு சிவாஜிக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் திருமணம். அப்போதுதான் 'தனக்குப் பிறந்தது இரட்டைப் பிள்ளை' எனும் விவரம் புஷ்பலதா மூலம் தெரியவருகிறது.
சிவாஜியையும் கே.ஆர்.விஜயாவையும் அடைத்து வைத்துக்கொண்டு, நெக்லஸ் குறித்து மிரட்டிக் கொண்டிருக்க, மகன் சிவாஜிகள் இருவரும் வருகிறார்கள். வில்லன்களைப் பந்தாடுகிறார்கள். அதற்கு முன்னதாகவே, சங்கர் சிவாஜி, உளவுத்துறை போலீஸ் என்பது நமக்குத் தெரியவருகிறது. பிறகென்ன... வில்லன்களை அடித்து வீழ்த்தி, போலீஸிடம் ஒப்படைக்கிறார்கள். அப்பா, அம்மா, மகன்கள் சிவாஜி, மருமகள்கள் என அனைவரும் ஒன்று சேருகிறார்கள்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கே.விஜயன் இயக்கிய படம். 'பலே பாண்டியா' மாதிரி முழுமையான காமெடிப் படமில்லை. ஆக்ஷன், சென்டிமென்டுகளும் உண்டு. 'தெய்வமகன்' மாதிரி சென்டிமென்ட், உணர்வுக்குவியல் என்றெல்லாம் இல்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியும் உணர்வுபூர்வமாக நமக்குக் கடத்தப்பட்டிருக்கும்.
சுமதியாக கே.ஆர்.விஜயா, தன் பண்பட்ட நடிப்பால் அசத்தியிருப்பார். ரீனா தன்னால் முடிந்த நடிப்பை வழங்கியிருப்பார். ஸ்ரீப்ரியா இளமையும் திமிருமாக பின்னர் திருந்தி திருமணம் செய்துகொள்பவராக, அட்டகாசமான நடிப்பை வழங்கியிருப்பார். தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், பிரேம் ஆனந்த், ஜெய்கணேஷ் முதலானோரும் தங்களின் பங்களிப்பைச் சரிவர செய்திருந்தார்கள். நம்பியாரும் எஸ்.வி.ராமதாஸும் வில்லன்கள். என்ன... இன்னும் கொஞ்சம் வில்லத்தனம் செய்திருக்கலாம்.
இந்தப் படம், சென்னையில் 900 ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. மதுரையில் 375 ஹவுஸ்ஃபுல் காட்சிகளைக் கடந்து ஓடியது. திருச்சி பிரபாத்திலும் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஒன்பது தியேட்டர்களுக்கு மேல் வெள்ளி விழா கடந்து ஓடியது. இலங்கையிலும் 'திரிசூலம்' மும்மடங்கு வெற்றியைக் கொடுத்தது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதினார். 'மலர்கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்' என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. டெலிபோனில், டிரங்கால் புக் செய்யப்பட்டு, 'கால்' வந்திருக்கும். எதிரெதிர் முனையில் சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும். நீண்ட வருடங்கள் கழித்து போனில் பேசிக்கொள்வார்கள். உருகுவார்கள். மகிழ்வார்கள். நெகிழ்வார்கள். ஆனந்தத்தில் அழுவார்கள். சிரிப்பார்கள்.
அப்போது சிவாஜி, கே.ஆர்.விஜயாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென அவசரமாக 'எக்ஸ்டென்ஷன் ப்ளீஸ்' என்று கத்துவார் சிவாஜி. அந்தக் காலத்தில், டிரங்கால் புக் செய்து பேசியவர்களுக்கு இது தெரியும். நடுவே டெலிபோன் டிபார்ட்மென்ட்காரர்கள் புகுந்து, ''என்ன... கால் கட் செய்யலாமா... நீட்டிக்க வேண்டுமா?'' என்று கேட்பார்கள். இதையெல்லாம் உணர்ந்து சிவாஜி நடிப்பில் அட்டகாசம் பண்ணியிருப்பார்.
1979-ம் ஆண்டு, ஜனவரி 27-ல் வெளியானது 'திரிசூலம்'. கமல், ரஜினி, விஜயகுமார், சிவகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த் என்று இளமை ததும்ப நடிகர்கள் வந்து விட்டிருந்த நிலையிலும், சிவாஜி வெள்ளிவிழாப் படமாக இந்தப் படத்தைக் கொடுத்து சாதனை படைத்தார். படம் வெளியாகி, 44 ஆண்டுகளாகியும், இன்னும் 'மலர்கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்' பாடல், நம் செவிகளுக்கும் மனதுக்கும் இதம் சேர்க்கிறது!
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu