பணிப்பாதுகாப்பு சட்டம் அவசியம் தேவை:தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

பணிப்பாதுகாப்பு சட்டம் அவசியம் தேவை:தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
X

பைல் படம்

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான அவசியம் அதிகரித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறியதாவது: சமூகவிரோதிகளால் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டுமென தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவிலும் ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகித்துள்ள அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நான்கு கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழகத்திலும் இந்த சட்டம் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டங்கள் வாயிலாகவும், தீர்மானங்கள் மூலமும் அறிக்கைகள் வாயிலாகவும், தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோதிகளால் ஆசிரியர் தாக்கப்பட்டபோது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன்னெழுச்சியாக 24 மணி நேரத்தில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி அரசின் கவனத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட கல்வித்துறை யினர் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனாலும் இதுநாள் வரை ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படவில்லை. சமூக விரோதிகளால் மருத்துவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்ட போது அதனை தடுக்கும் வகையில் மருத்துவர்கள் பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அதேபோல் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்தாமல் தாமதிப்பது, ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களின் பணி சார்ந்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவது போல், சமூக விரோதிகளிடமிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கொண்டு வர வேண்டிய ஆசிரியர் பணிப் பாதுகாப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையும் அலட்சியப் படுத்தப்படுகிறதோ என்று அய்யம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் ஆசிரியர்கள் சமூக விரோதிகளால் தாக்குதல்களுக்கும், மிரட்டல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இதனை அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க கூடாது. அதே நேரத்தில் மாணவர்களின் நன்னடத்தை குறித்து ஆசிரியர்கள் கருத்துக்களை முன் வைக்கும் போதும், ஆசிரியர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத வகையில் பள்ளிகளில் சமூக விரோதிகளால் நடத்தப்படும் விரும்பத்தகாத செயல்களுக்கும், ஆசிரியர்களே பலிகடாவாக ஆக்கப்படுகிறார்கள்.

இதில் ஆசிரியர்கள் பக்கமிருந்து பாதுகாக்க வேண்டிய கல்வித்துறை நிர்வாகம், மாறாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவைகளையெல்லாம் உள்ளடக்கிய ஆசிரியர் பணிப் பாதுகாப்பு சட்டம் தற்போதைய நிலையில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே இனியும் தாமதிக்காமல் ஆசிரியர் பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் முடி திருத்தம் செய்தல், உடை அணியும் முறை உள்ளிட்ட நன்னடத்தைக்கான அறிவுரை வழங்கும் பணியில் ஈடுபடுவதா? கூடாதா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உணர்ச்சிவசத்தால் பொதுமக்கள் மேற்கொள்ளும் குழு நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து ஆசிரியர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை இனியும் ஏற்க முடியாது. அரசின் திட்டங்களை அரசின் கொள்கைகளை செயல்படுத்தும் ஆசிரியர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதனை உணர்ந்து உடனடியாக ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!