நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா திரும்ப பெறப்படுமா?
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு நீர் நிலைகள், நீரோடைகள், ஏரி, ஆறு, குளம் ஆகியவற்றை உள்ளடக்கிய 100 ஏக்கருக்கும் அதிகமான தனியார் - அரசு திட்டங்களுக்கு நீர்நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றையும் சேர்த்து திட்டப் பகுதியில் கொண்டு வந்து பெரும் திட்டங்களை செயல்படுத்திட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் - 2023 (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act - 2023) சட்டத்தை தமிழ்நாடு சட்டசபையில் ஏப்ரல் 21 அன்று நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அரசு இதழில் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படும்.
இந்த சட்டத்தின் மூலமாக நீர் நிலைகள், நீரோடைகள் நிரம்பியுள்ள பரந்தூர் விமான நிலையம் போன்ற பெரும் கட்டுமான பகுதிகளுக்குள் உள்ள நீர் நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றையும் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திடம் ஒப்படைக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சிவப்பு நிற தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு 5 கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டுமென நிர்ணயம் செய்துள்ளது. மேலும் ஏரிகள், குளங்கள், நீரோடைகள் ஆகியவற்றிற்கு அருகில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு குறைந்தபட்ச இடைவெளியை நிர்ணயம் செய்துள்ளது. வருங்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பெரும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு - தனியார் நிறுவனங்கள் திட்டப்பகுதிகளுக்குள் உள்ள நீரோடைகள், நீர்நிலைகள், ஏரி, குளம் ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு கழிவுநீர்களை விட்டு அதிகாரப்பூர்வமாக மாசுபடுத்துவதற்கு இந்த சட்டம் இட்டுச் செல்லும்.
ஏற்கனவே நொய்யல், அமராவதி, பவானி, காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் சட்டவிரோதமாக கழிவுநீர் கலக்கப்பட்டு மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் குடிநீருக்கு கூட அரசை எதிர்பார்த்து காத்திருக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மாசுபட்டு தமிழ்நாடு நோய்களின் தலைநகரமாக இந்தியாவில் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
நீர்நிலைகள், நீரோடைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவை நேரடியாக தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது தமிழ்நாட்டில் 12,000த்திற்கும் மேற்பட்ட ஏரிகள் காணாமல் போய்விட்டன. ஆறுகள், நீரோடைகள் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளன. கழிவுநீர்கள் கலக்கப்பட்டுள்ளன. நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு சமூக ஆர்வலர்கள், நீர் ஆத்மாக்கள் தொடர்ச்சியாக போராடி தங்களது இன்னுயிரையும் இழந்து உள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு 26,000ம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சிப்காட் நிறுவனம் மூலமாக தொழிற்பேட்டை திட்டங்களுக்காக வரும் காலங்களில் கையகப்படுத்த உள்ளது. இதுபோன்று கையகப்படுத்தும்போது நீரோடைகள், நீர்நிலைகளை விலக்கி கையகப்படுத்த வேண்டும். இனி வருங்காலத்தில் நீரோடைகள், நீர் நிலைகளையும் சேர்த்து, அந்த பகுதிகளை சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் தொழிற்பேட்டை களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் கழிவுநீர்களை சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்திற்கு அடியிலும், நீரோடைக ளிலும் கலந்து மிகப் பெரிய சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் அமைந்துள்ள ஒரு நிறுவனம் சிப்காட் அருகில் உள்ள நீர் நிலையில் கழிவு நீரை கலந்து மிகப் பெரிய மாசை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. நீரோடைகள், நீர்நிலைகள் ஆகியவை பொதுமக்களின் சொத்துக்கள். அவற்றை பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் உள்ள மக்களின் உரிமைகள் இனி சிறப்புத் திட்டங்கள் என்ற வகையில் பறிக்கப்படும்.
அதற்கு வழிவகை செய்யக்கூடிய இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu