வரும் 12ம் தேதி குமுளி எல்லை முற்றுகை போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வரும் 12ம் தேதி குமுளி எல்லை முற்றுகை போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக்.

வரும் 12ம் தேதி குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடக்க உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குமுளி எல்லையில் வரும் 12ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளருமான ச.பென்னிகுயிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது உடல் ஒத்துழைக்காவிட்டாலும், மனம் முல்லைப் பெரியாறை குறித்து ஏங்கி நிற்கிறது. வயநாடு மாவட்டத்தில் முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி. கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை குறித்து கடுமையான அபவாதங்கள் முன்வைக்கப்படுகிறது.

முளைத்து மூன்று இலை விடாத சின்னஞ்சிறு அமைப்புகள் எல்லாம் முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்று களத்தில் இறங்கி இருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் கடுமையான பிரச்சாரங்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் கொடுத்த முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்புகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மனம் போன போக்கில் விமர்சனங்களை முன்வைக்கிறது மலையாள உலகம்...

எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஐபி ஈடன் என்பவர், நாடாளுமன்ற மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரும் அளவிற்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. 20 20 பார்ட்டி எனப்படும் ஒரு சின்னஞ்சிறு கட்சி ஊர் ஊராக சென்று கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. மலையாள யூ டியூபர்கள் தங்களுக்கான வருமான காலமாக இந்த காலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இடுக்கி மாவட்டத்திலும் ஆங்காங்கே சலசலப்புகள் எழுந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கிற இந்த செயலை கண்டித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இன்னம் இருக்கிற விவசாய சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைத்து வரும் 12ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் குமுளி எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம்.

ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி நாங்கள் நடத்த இருக்கும் இந்த போராட்டத்தில், விவசாய சங்கங்களை மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், வணிகர் சங்கங்கள் கூடுதலாக கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கிறோம்.

இந்தப் பெருந்திரள் முற்றுகைக்கு இதை வாசிக்கிற அனைவரும் அணி திரண்டு வர வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம். முற்றுகையிட்டதோடு, பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கவும், அதற்காக தொடர்ந்து போராடவும் புதிய இயக்கத்தை தொடங்க இருக்கிறோம்.

தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறோம். 99 ஆண்டுகளும் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக நிற்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil