தமிழில் குடமுழுக்கு சாத்தியமில்லை ஆன்மீக பத்திரிக்கையாளர் கடும் எதிர்ப்பு
பைல் படம்
தமிழில் கோயில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் ஆன்மீக பத்திரிக்கையாளர் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆலோசனை கூட்டத்தில் கொடுத்த மனுவின் விவரம் நமது வாசகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக் குழுவுக்கு அனுப்பியுள்ள மனுவிவரம்: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான நான், தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஆன்மிகப் பத்திரிகைகளான சக்தி விகடன், தினமணி - வெள்ளிமணி, கல்கியின் தீபம் இதழ்களில் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்த படியும், கலைமகள், கோபுர தரிசனம், அம்மன் தரிசனம் உள்ளிட்ட ஆன்மிக இதழ்களிலும், சன் டிவியின் தெய்வதரிசனம் உள்ளிட்ட தொடர்களிலும் பல்வேறு ஆலயங்கள் குறித்தும், விழாக்கள், நம் மரபு சார்ந்த நம்பிக்கைகள் குறித்தும், ஆன்மிகத் தகவல்கள் குறித்தும் கட்டுரைகளை எழுதியுள்ளேன். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் ‘திருக்கோயில்’ இதழின் ஆலோசகர் குழுவிலும் இருந்துள்ளேன்.
இந்த அனுபவத்தின் அடிப்படையிலும், தனிப்பட்ட வகையில் நம் ஆன்மிக மரபு சார்ந்து இயங்குபவன் என்ற வகையிலும் ‘தமிழில் குடமுழுக்கு’ என்ற சர்ச்சையான விஷயத்தில் எனது கருத்தைப் பதிவு செய்கிறேன்.
நான் தமிழகத்தில் பயணம் செய்து எழுதியுள்ள, பதிவு செய்துள்ள கோயில்கள் அனைத்துமே, ஏதோ ஒரு வேத ஆகமத்தின் அடிப்படையில் அமைந்தவையே! எங்குமே தமிழ் ஆகமம் என்ற ஒன்றையோ, அதன் அடிப்படையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது என்ற சொல்லையோ நான் கேட்டதில்லை. சைவ, வைணவ ஆலயங்களில், கோயில்களின் அமைப்பு, சந்நிதிகளின் அமைப்பு, பூஜைகள் நடைபெறும் விதம், குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) மற்றும் புனித நன்னீர்த் தெளிப்பு (சம்ப்ரோக்ஷணம்) வைபவம் ஆகியவை குறித்து தெளிவாக, இன்னின்ன செய்ய வேண்டும் என்று முன்னோர் வகுத்து, எழுதியுள்ளனர்.
இவற்றில் சைவாகமம் இறைவன் சிவனே கொடுத்தது என்றும், வைகானச ஆகமம் விஷ்ணுவின் அம்சமான விகனசாச்சாரியார் அளித்தது என்றும், பாஞ்சராத்ர ஆகமம் ஐந்து இரவுகளில் முனிவர்க்கு விஷ்ணுவே அளித்தது என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் முன்னோர் வழிவழியாகக் கடைப்பிடித்து வந்த மரபிலும், காதுகளில் கேட்டு வாய் மூலம் தகுந்த அனுஷ்டானங்களுடன் குரு சீட உறவு முறையில் உச்சரித்து உருப்போட்டு வந்த வேத மந்திரங்கள் அடிப்படையிலும் கோயில்களின் பூஜை நடைமுறைகள் அமைகின்றன.
அவ்வாறே குடமுழுக்கு வைபவங்களில் யாக குண்டங்கள் அமைப்பது, எந்த தேவதைகளை எவ்வாறு அழைத்து திருப்தி செய்து கோயிலில் சாந்நித்யம் ஏற்படுத்துவது போன்றவைகளை ஆண்டாண்டு காலமாக தவம் செய்து இயற்கை சக்தியை தங்களுள் உள்வாங்கிக் கொண்ட ரிஷிகளும் முனிவர்களும் அமைத்துத் தந்து வழிகாட்டியுள்ளார்கள். எனவே இந்த மரபுகளை மீறி புதிதாக நடைமுறைகளை உருவாக்க இந்தக் காலத்தினராம நாம் எவரும் தவசீலரோ, அல்லது நெறியுடையோரோ, ஆன்மிக அறிவாளிகளோ அல்லர் என்பதால், அரசுத் துறையின் இந்த ‘தமிழாக்க’ முயற்சியை நிறுத்திக் கொண்டு, ஆக்கபூர்வமான வேறு தமிழ்ப் பணிகளில் கவனம் செலுத்தலாம்.
பக்தர்களுக்கு புரிய வேண்டும் என்ற மொழியில் நடத்தப்பட வேண்டும் என்றால், இப்போது கும்பாபிஷேகம், மற்றும் பூஜைகளின் போது எதற்காக இதைச் செய்கிறோம் என்ற தமிழ் மொழி விளக்கத்தை பக்தர்களுக்குப் புரியும் வகையில் சிவாசாரியார்களோ, பட்டாச்சாரியார்களோ ஒலிபெருக்கி மூலம் குடமுழுக்கு வைபவங்களில் கட்டாயம் சொல்ல வேண்டும் என்று விதிக்கலாம். கிரியைகள் மாறுதலுக்கு உட்பட்டது அல்ல. காலங்காலமாகக் கேட்டு உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ள மந்திரங்களை நாம் எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது. இந்த நாட்டில் வேறு எந்த மொழியிலும் இவ்வாறு குடமுழுக்கு வைபவங்களை அவரவர் மொழியில் மொழிபெயர்க்குமாறு யாரும் கோரவில்லை. அது இயலாது என்பதால்..!
நோய்க்கு மருந்து நாடி மருத்துவரிடம் செல்பவன், பரிந்துரைக்கும் மருந்தை நம்பிக்கையின் படி பெற்று உண்பானே தவிர, மருந்தின் மூலக்கூறுகளை தனக்குப் புரியும் மொழியில் அக்குவேறு ஆணிவேறாக மருத்துவர் சொல்லி, அதில் தனக்கு நம்பிக்கை வந்தால் மட்டுமே உண்பேன் என்று அடம்பிடிக்க மாட்டான். எனவே ஆட்சியாளரின் ‘நாத்திக’ அரசியல் நடைமுறைப்படுத்தலை, ‘ஆத்திக’ பக்தர்களின் பேரைச் சொல்லி செயலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu