5 நாட்களாக தமிழக வாகனங்களை நிறுத்தி வைத்த கேரள வனத்துறை: விவசாயிகள் கோபம்

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.
தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலர்களின் குடியிருப்பினை பராமரிக்க பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஐந்து மாவட்ட விவசாயிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லை பெரியாறு அணையினை பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குடியிருப்பு கேரளாவில் தேக்கடி செல்லும் பாதையில் உள்ளது. இந்த குடியிருப்பிற்கு வனத்துறை சோதனை சாவடியை கடந்தே செல்ல வேண்டும். இந்த பழமையான குடியிருப்புகளை சீரமைக்க தேவையான மூலப்பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழக வாகனம் இன்றுடன் ஐந்தாவது நாளாக கேரள வனத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தேக்கடி ஒன்றும் ராணுவ கட்டுப்பாடு மிகுந்த பகுதி இல்லை. நம்மை அந்த பாதையினை பயன்படுது்தக் கூடாது என கேரள வனத்துறை தடுத்தால், நாமும், கேரள மக்கள் வெள்ளிமலை, வாசுதேவநல்லுார் வனப்பகுதி பாதைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் உணவுப்பொருட்களை இரண்டு நாள் தடுத்து நிறுத்தினால் தேக்கடி வனத்துறை சோதனை சாவடி கதவுகள் தானாக திறக்கும். தொடர்ச்சியாக முல்லை பெரியாறு அணையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நமது உரிமைகளை விட்டுக் கொடுத்து வருகிறோம். இது ஏற்புடைய விஷயம் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இல்லையென்றால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதோ அழிந்திருக்கும்.
மதுரை எம்.பி., வெங்கடேசன் முல்லை பெரியாறு என்றாலே ஓடி ஒளிந்து கொள்கிறார். அவரை நான் விவாதத்திற்கு பலமுறை அழைத்தும் வர மறுத்து விட்டார். தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் சவலை விளையாட்டு விளையாடும் நிலையில் தமிழக முதல்வரும் இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.
நமது அணைக்கு நம்மால் நினைத்த நேரத்தில் செல்ல முடியவில்லை. நமது அதிகாரிகள் செல்ல முடியவில்லை. குமுளியை தாண்டி எந்த கேரள வாகனமும் தமிழகத்திற்குள் வரக்கூடாது என தடுத்து விட்டால் அவர்கள் நிலை என்னவாகும். இந்த விஷயத்தில் தேனி கலெக்டரின் மவுனமும் எங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி வருகிறது. கேரள வனத்துறைக்கு இருக்கும் தைரியம், தமிழக வனத்துறைக்கு இல்லையா? இரு மாநில உறவும் கெட்டு விடக்கூடாது என்பதற்காக அமைதி காக்கிறோம். இல்லையென்றால் ஒரே நாளில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம்.
ஏமாற்றுக்கார மலையாளிகளை எங்கு அடித்தால் வலிக்கும் என்ற வித்தைகளை நான் உட்பட தமிழக விவசாயிகள் நன்கு கற்றுள்ளனர். தமிழக முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும். ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்துக் கொள்ளப்போகிறது. இதற்கான ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu