தமிழர்கள் என்ற உணர்வுடன் இருப்பது தவறா? கேரளஅரசியல்வாதிகளுக்கு விவசாயிகள் பதிலடி

தமிழர்கள் என்ற உணர்வுடன் இருப்பது தவறா?  கேரளஅரசியல்வாதிகளுக்கு விவசாயிகள் பதிலடி
X

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

கேரள சமூக வலைதளங்களில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகளை பற்றி தவறாக விமர்சனம் செய்வதற்கு விவசாயிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

தமிழர்கள் தமிழ் உணர்வுடன் இருப்பது எப்படி தவறாகும்? நீங்கள் என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள்? எங்கள் நிலையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: கேரள சமூக வலைதளங்களில் என்னை (அன்வர் பாலசிங்கம்) மிகுந்த தமிழ் உணர்வு கொண்டவர். மூணாறு தமிழர்களை துாண்டி விடுகிறார் என விமர்சிக்கின்றனர். சிலர் என்னை தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். மூணாறில் முழுக்க தமிழர்கள் மட்டுமே வாழ்கின்றனர். அங்கு கேரள மக்கள் 5 சதவீதம் தான் இருக்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பது உலகிற்கே தெரிந்த விஷயம்.

நான் தமிழ் உணர்வு மிக்கவனாம். என்னை, மத்திய மாநில உளவுப்பிரிவுகள் கண்காணிக்கிறதாம். நான் என்ன தீவிரவாதியா? இல்லை தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறேனா? தமிழனான நான், தமிழ் உணர்வுடன் இருப்பதில் என்ன தவறு. முல்லை பெரியாறு அணையில் தமிழர்களின் உரிமைகளை கேட்பதற்கும், மீட்டுத்தருவதற்கும் எங்களுக்கு முழு உரிமை உண்டு.

பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை அதாவது இடுக்கி மாவட்டத்தை நான் பிரித்து தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று கேட்கிறேனாம். ஆமாம் கேட்கிறேன். இன்னும் கேட்பேன். 1956ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, வகுத்த விதிகளின்படி 95 சதவீதம் தமிழர்கள் வசிக்கும் பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்களை தமிழகத்துடன் இணைத்திருக்க வேண்டும்.

அப்படி இணைத்திருந்தால் இன்று முல்லை பெரியாறு பிரச்னையே வந்திருக்காது. கேரள அரசியல்வாதிகள் இதனை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது. நாங்கள் இப்போது முல்லை பெரியாறு அணை பற்றி முழு உண்மை வரலாற்றினை தொகுத்து வருகிறோம். அதனை புத்தகமாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் வழங்க உள்ளோம். கேரள சமூக வலைதளங்களில் என்னை பற்றியும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பற்றியும் என்ன விமர்சனம் வந்தாலும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. முல்லை பெரியாறு அணையின் உரிமைகளை மீட்டு, ஐந்து மாவட்டங்களில் வசிக்கும் ஒரு கோடி தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம். நிச்சயம் உரிமைகளை மீட்டெடுப்போம். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்