எல்லாம் முடிந்ததா? இனி தான் ஆட்டம் ஆரம்பம்..!
ஓபிஎஸ்(பைல் படம்)
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கே நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக இருக்கின்றன. இதனால் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். ஆனால், தேர்தல் ஆணையத்தில் அவரால் வெல்ல முடியாது. எல்லாம் முடியவில்லை. இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
அவர் மேலும் இதுகுறித்து விரிவாக கூறியுள்ளதாவது: பொதுச் செயலாளராக தொண்டர்கள் தேர்வு செய்து கொண்டாடி மகிழ்ந்த தலைமை தான் அன்றைய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா என்னும் சாஸ்வத சரித்திரங்கள். ஆனால், இன்றோ தொண்டர்களின் உரிமையை பறித்து விட்டு பொதுக்குழு என்னும் புறவாசல் வழியே கழகம் எனும் ஆலயத்தை கைப்பற்றி விட்டதாகவும், தொண்டர்களுக்கு பதிலாக தனது பணப் பண்ணையில் தீனி போட்டு தான் வளர்த்த பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு பொதுச் செயலாளர் பதவியை தந்து விட்டதாகவும், கூடவே நீதிமன்றமும் தன்னை பொதுச் செயலாளராக நியமித்து விட்டதாகவும் எடப்பாடி தனக்குத் தானே ஒரு சுயபட்டாபிஷேகம் நடத்திக் கொண்டு மக்கள் திலகம் எம்ஜிஆரை போல மாறுவேடம் போட்டு பித்தலாட்டத்தின் உச்சத்தில் எடப்பாடி நிற்கிறார்.
இந்த அசிங்கமான அபகரிப்பை நடத்தி முடிக்க சிலரை வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளார். தான் நினைத்ததை சாதித்து விட்டதாக அவர் நினைக்கிறார். மேலும் விரும்புவதை விரும்புகிற வடிவத்தில் விரும்புகிற நேரத்தில் எதையும் பெற்றுக் கொடுக்கும் அமானுஷ்ய சக்திகள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார்.
ஆனால் இதே அண்ணா திமுகவுக்கு ப.உ.சண்முகம், ராகாவானந்தம், நாவலர் நெடுஞ்செழியன், அன்னை ஜானகி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, சசிகலா போன்றோர் எப்படி பொதுச்செயலாளராக வந்தாலும் தொண்டர்களால் தேர்வு செய்யப்படாத அவர்கள் எப்படி ஒரு இடைவேளை கதாபாத்திரங்கள் ஆனார்களோ அதே போன்று இன்னும் சொல்லப் போனால் அதற்குக் கூட பொருந்தாத ஒரு ஒரு காமெடிக் கூத்தை தான் சிலுவம்பாளையத்து சார்லி சாப்ளின் நடத்தி வருகிறார் என்பதே உண்மை.
எங்கே ஒரு நீதிதேவதை முழுமையாக எம்.ஜி.ஆர் வகுத்து போன கட்சியின் மாற்றக் கூடாத விதிகளை கண் கொண்டு பார்க்கிறதோ எங்கே ஒரு நீதி தேவதையின் செவிகளில் கழகத் தொண்டர்களின் உரிமைக்குரல் முழுமையாக கேட்கிறதோ அன்று எடப்பாடியின் ஒட்டு மொத்த அபகரிப்பு அரசியலும் முடிவுக்கு வந்துவிடும் என்பது சத்தியம். அது விரைவில் முன்னெடுக்க இருக்கிற மேலமை நீதி மன்றங்களில் அல்லது தேர்தல் ஆணையத்தில் அது நடந்தே தீரும் என்பது திண்ணம்.
ஆக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாரதியார் வேஷம் தொடங்கி சில தருணங்களில் பிச்சைக்காரன் வேஷம் வரை போட்டு ரசிப்பது போல, எடப்பாடியின் டெண்டர் கும்பல் தங்களது குபேரக்கடவுளான எடப்பாடிக்கு பொதுச் செயலாளர் வேஷம் கட்டிப் பார்க்கிறது என்பதை கழகத் தொண்டர்கள் புரிந்து கொள்வார்கள்.
எனவே பூச்செண்டுகளை தாங்களே ஏற்பாடு செய்து வாழ்த்துகளை தாங்களே வரவழைத்து விட்டு வாழ்த்துகள் குவிவதாக வர்ணனை செய்வது. சில கையேந்தி பவன் தலைவர்களை வரவழைத்து அவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பதாக மாயஜாலம் காட்டுவது என எல்லாமும் பக்கா மோசடிகள் என்பதை கழகத் தொண்டர்கள் புரிந்து கொள்ளவார்கள்.
எனவே எல்லாம் முடிந்தது என எவராவது சொன்னால் அவர்களிடம் இனி தான் ஆட்டம் ஆரம்பம் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்க. ஆம் எடப்பாடி ஒரு போதும் அதிமுகவுக்கு பொதுச் செயலாளர் ஆக முடியாது. மனித சக்தி கடந்த மகா சக்திகள் அமர்ந்த அந்த மகோன்னத ஆசனத்தில் ஒரு போதும் எடப்பாடி அமரவே முடியாது. இது நிச்சயம். இதுவே சத்தியம். இவ்வாறு மருதுஅழகுராஜ் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu