இளையராஜாவை கலங்க வைத்த பத்திரிகை பேட்டி

இளையராஜாவை கலங்க வைத்த பத்திரிகை பேட்டி
X

பைல் படம்

'அப்பிராணி' என்ற வார்த்தைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருந்தவர் அன்றைய இளையராஜா.

ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார். சாந்தமாக இருந்தார். சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா. அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார். பரிவுடன் நடந்து கொண்டார். கேட்ட போதெல்லாம் பேட்டிகள் கொடுத்தார். விதம் விதமாய் போட்டோக்கள் எடுக்க, வித்தியாசமான போஸ்களும் கூட கொடுத்தார். ஆனால் அப்படி அப்பிராணியாய் இருந்த அந்த இளையராஜாவை அடியோடு மாற்றியது, ஒரு சில பத்திரிகைக்காரர்கள் தான்.

உள்ளொன்று வைத்து புறமொன்று கேள்வி கேட்டார்கள். அதில் உள்ளுக்குள் ஒளிந்திருந்த சூழ்ச்சி புரியாமல் வெள்ளந்தியாய் அவர் சொன்ன பதில்களை, வில்லங்கமாக மாற்றிப் போட்டார்கள். வேறு விதமாய் அர்த்தம் கொடுத்தார்கள். அதில் உச்சகட்டமாக அமைந்தது 1989இல் வெளிவந்த ஒரு பத்திரிகை பேட்டி.

இளையராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்: "நீங்கள் எது இசை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள் ?" இந்தக் கேள்விக்கு வார்த்தைகள் எதையும் கட்டுப்படுத்தாமல், தன் மனதில் பட்டதை எல்லாம் சொன்னார் இளையராஜா. "இசை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை. கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடும் ராகங்களில் மட்டுமே இசை இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் ஒரு இசை இருக்கிறது. ஒரு ராகம் இருக்கிறது. ஒரு தாளம் இருக்கிறது.

ஒரு மழைத்துளி மண்ணில் விழுவதில் இசை இருக்கிறது. ஒரு குழந்தையின் நடையிலும் இசை இருக்கிறது. ஓடும் நதியில் ஒரு இசை இருக்கிறது. ஓங்கி விழும் அருவி சத்தத்தில் கூட சங்கீதம் இருக்கிறது. அவ்வளவு ஏன் ? நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் கூட ஒரு இசை இருக்கிறது. கவனித்துப் பார்த்தால் உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் இசை இருக்கிறது."

இதுதான் இளையராஜா சொன்ன பதில். ஆனால் இந்த பதில் மூலமாக ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது. அடுத்த வாரம் வெளி வந்த ஒரு சில பத்திரிகைகளில், இளையராஜாவின் பேட்டிக்கு இப்படி ஒரு தலைப்பு கொடுத்திருந்தார்கள்.

"நாய்கள் ஊளையிடுவதும், கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடுவதும் எனக்கு ஒன்று தான்." பரபரப்பான அந்த பேட்டியை படித்தவர்கள் அதிர்ந்து போனார்கள். தொடர்ந்து இப்படி போனது அந்தப் பேட்டி.

"ஒரு நாய் ஊளையிடுவதைக் கேட்டுப் பாருங்கள். அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா? ஒரு நாய் ஊளையிடுவதற்கும் வித்வான்கள் பாடுவதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உண்மையில் வெவ்வேறு சமயங்களில் ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குரைக்கிறது என்பதை இசைக்குறிப்புகளாக எழுத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது என் எண்ணத்தை நிருப்பிப்பதாக இருக்கிறது. ஒலியன்றி வேறல்ல இசை.” இப்படிச் சொல்லியிருந்தார் இளையராஜா.

கொதித்துப் போனார்கள் கர்நாடக சங்கீத வித்வான்கள். எதிர்ப்புகள் எரிமலையாக சீறி வெடித்தன. ஆவேசமான அர்ச்சனைகள், அடுக்கடுக்காய் பிரச்னைகள். இசையைத் தவிர எதையும் நினைக்காத இளையராஜா இந்த வசைச் சொற்களால் வாடிப் போனார். வருத்தம் அடைந்தார்.அப்போது தான் தீர்க்கமாகச் சிந்தித்து தெளிவான அந்த முடிவை எடுத்தார். இனி தேவை இல்லாமல் மீடியாக்காரர்களிடம் பேசுவதில்லை. இன்னொன்றையும் கூட அவர் புரிந்து கொண்டார். இசை அமைப்பது மட்டும் கலை அல்ல. சொற்களைக் கையாளுதலும் கூட ஒரு கலை தான். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம்.......

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!