இசைஞானி - இயக்குனர் சிகரம் மோதலுக்கு காரணம் என்ன?
இயக்குனர் பாலசந்தர், இசையமைப்பாளர் இளையராஜா (கோப்பு படம்)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு சிவக்குமார் சுஜாதா நடிப்பில் வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது இசை மற்றும் பாடலுக்காகவே தமிழ் சினிமாவில் பல படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது என்று சொல்லலாம்.
80-90 காலக்கட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு இளைரயாஜா தான் இசையமைத்திருப்பார். இந்த காலக்கட்டங்களில் பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருந்திருந்தாலும், இவரின் உயரத்திற்கு அவர்களால் வர முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இசையில் தனி சாம்ராஜ்யம் அமைத்த இளையராஜா 70 வயதை கடந்திருந்தாலும் இன்றும் தனது இசைப்பணியை தொடர்ந்து வருகிறார்.
இளைராஜாவின் இசை பலருக்கு பிடித்தமாக ஒன்றாக இருந்தாலும் அவரின் பேச்சு சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றது. அதேபோல் திரைத்துறையில் பல முக்கிய பிரமுகர்களுடன் இளையராஜாவுக்கு மனக்கஷ்டங்கள் மோதல்கள் இருந்துள்ளது. இது போன்று ஒரு மோதல் காரணமாகத்தான் இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் கவிதாலாயா நிறுவனத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று இளையராஜா மறுத்ததும், அதன்பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற ஆஸ்கார் நாயகன் உருவானதும் நடந்தது.
இசையமைப்பாளராக கோலாச்சிய இளையராஜாவின் இசையில் கே.பாலச்சந்தரின் நிறுவனமான கவிதாலயா பல படங்களை தயாரித்துள்ளது. இதில் பெரும்பாலான படங்கள் இளையராஜாவின் இசையால் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் 80-களின் இறுதியில் இளையராஜாவுக்கும் கவிதாலாயா நிறுவனத்திற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இளையராஜா பாலச்சந்தர் நிறுவனத்தின் படங்களுக்கு இசையமைக்க மறுத்துவிட்டார்.
இது குறித்து பேசியுள்ள நடிகரும் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பாளருமான பிரமீட் நடராஜன் கூறுகையில், எங்களது நிறுவனத்தில் 3 படங்கள் தயாரிப்பில் இருந்தது. இந்த படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதாக ஒப்பந்தமானார். படப்பிடிப்பை முடித்து ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு அவரிடம் சென்ற போது, பல படங்கள் இருக்கிறது அதனால் இப்போது முடியாது என்று சொன்னார் வேண்டுமென்றால் ட்ராக் எடுத்து போட்டுக்கொளளுங்கள் என்று சொன்னார்.
அதன்பிறகு ஏற்கனவே அவர் இசையமைத்த மியூசிக் எங்களிடம் இருந்ததால் அதை நாங்கள் பின்னணி இசையாக சேர்த்துக்கொண்டு படத்தை வெளியிட்டோம். அதேபோல் மற்றொரு படத்திற்கும் ட்ராக் வைக்க சொல்லி சொன்னார். அதேபோல் செய்து வெளியிட்டோம் படம் வெற்றியடைந்தது. படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக அவரை அழைக்கச் சென்றேன். அவர் என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டு நீங்கள் தான் ட்ராக் போட்டீங்களே என்று சொன்னார்.
தனக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பேசினார். அதற்கு நீங்கள் தான் ட்ராக் போடச் சொன்னீங்க என்று நான் சொல்னேன். அதற்கு நான் சொன்னா நீங்கள் போட்டு விடுவீங்களா என்று கேட்டார். இதற்கு மேல் பேசினால் பிரச்சனை வந்து விடும் என்பதால் நான் அப்படியே வந்து விட்டேன். அடுத்து இயக்குனர் வசந்த் எங்கள் நிறுவனத்திற்கு படம் பண்ணுவதாக கூறி இசையமைக்க கேட்ட போது இளையராஜா கவிதாலயாவுக்கு இனி பண்ணுவதில்லை என்று சொல்லிவிட்டார் என கூறியுள்ளார்.
இளையராஜா கவிதாலயாவுக்கு கடைசியாக இசையமைத்த படம் உன்னை சொல்லி குற்றமில்லை. இந்த படம் 1989-ம் ஆண்டு வெளியானது. அமீர்ஜான் இயக்கிய இந்த படத்தில் கார்த்திக் அம்பிகா இணைந்து நடித்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu