ஹோமியோபதி டாக்டர் துாக்கிட்டு தற்கொலை:மருத்துவ இணை இயக்குனர் மிரட்டல் என புகார்

ஹோமியோபதி டாக்டர் துாக்கிட்டு தற்கொலை:மருத்துவ இணை இயக்குனர் மிரட்டல் என புகார்
X

இணை இயக்குனரின் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சீனிவாசன்.

துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு , மருத்துவ இணை இயக்குனரின் மிரட்டல்தான் காரணம் என உறவினர்கள் புகார்

பெரியகுளம் அருகே ஹோமியோபதி டாக்டர் சீனிவாசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு , மருத்துவ இணை இயக்குனரின் மிரட்டல்தான் காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் என்.ஆர்.டி., தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 49. இவர் அதே பகுதியில் செல்வி எலக்ட்ரோ ஹோமியோ கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவியும் இங்கு ஹோமியோபதி சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் தேனி மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன், இவரது கிளினிக்கிற்கு வந்து நீங்கள் விதிகளை மீறி கிளினிக் நடத்துகிறீர்கள். இதனை மறைக்க பணம் கேட்டதாகவும், அதற்கு சீனிவாசன் 40 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஓராண்டுக்கும் மேலாக மாதந்தோறும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் நான்கு நாட்களுக்கு முன்னர் இணை இயக்குனர் அனுப்பியதாக கூறி நான்கு பேர் டாக்டர் சீனிவாசனிடம் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மன உலைச்சலுக்கு உள்ளான சீனிவாசன் இன்று தனது வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து டாக்டரின் மனைவியும், அவரது உறவினர்களும் கூறியதாவது: கடந்த ஓராண்டாகவே இணை இயக்குனர் லட்சுமணன் தன்னுடன் நான்கு பேரை அழைத்து வந்து ஒவ்வொரு முறையும் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டினார். மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வேண்டும் என தொல்லை கொடுத்தார். நாங்கள் கொடுத்த ஆவணங்கள் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். பணம் தராவிட்டால், நாங்களே அலோபதி மருந்து கொண்டு வந்து உங்கள் மருத்துவமனையில் வைத்து, நீங்கள் விதிகளை மீறி அலோபதி சிகிச்சை அளித்ததாக வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினார்.

இந்த மிரட்டல் தாங்க முடியாமல் எனது கணவர் கடும் மனஉலைச்சலில் இருந்தார். இன்று தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணனும், அவருடன் வரும் நான்கு பேருமே இதற்கு காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்றார்..

இவரது மரணத்திற்கு காரணம், இணை இயக்குனர் லட்சுமணன் தான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இதே போல் மாவட்டம் முழுவதும் டாக்டர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார் எனக்கூறி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பெரியகுளம் நகர் பகுதி முழுக்க கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி