கண்ணதாசனை கட்டிப்பிடித்து அழுத சாண்டோ சின்னப்பா தேவர்
கிருபானந்தவாரியாருடன் சாண்டோ சின்னப்பா தேவர்.
கோவை பக்கம் மருதமலை அருகே பிறந்தவர் அவர், எத்தனையோ தொழிலை செய்தார் அத்தனையும் நஷ்டம். தொட்டதெல்லாம் நஷ்டம் எனும் நிலையிலும் முருகன் மேலான அவரின் பக்தி குறையவில்லை. பால்பண்ணை முதல் சிறிய சண்டை நிலையம் வரை நடத்தியும் அவர் கஷ்டம் தீரவில்லை. ஆனால் தொடர்ந்து தன் வீரமாருதி உடற்பயிற்சி நிலையத்தை நடத்தினார். கத்திசண்டை முதல் கம்புசண்டை வரை அதில் அவரால் பயிற்றுவிக்கப்பட்டது. மிக உறுதியான கட்டுப்பாடும் பக்தியும் கொண்ட அவர் தன் சோதனை காலத்தில் முருகனை மறக்கவில்லை.
ஒருமுறை 20 ரூபாய் அவருக்கு கடன் இருந்தது. அதை கட்ட வழியில்லாமல் மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று அழுது புலம்பினார். முருகன் வழிபாட்டை முடித்து வெளியே வந்த பொழுது அங்கே காலியான சிகரெட் பெட்டி கிடந்தது. அதனை எடுத்து பார்த்த பொழுது உள்ளே 20 ரூபாய் இருந்தது. அந்த இடத்தில் முருகனை விழுந்து வணங்கி, அவன் எக்காலமும் தன்னோடு இருப்பதை உணர்ந்ததாக தேவரே சொல்லியிருக்கின்றார்.
ஆம், 20 ரூபாயினை கட்ட வழியில்லாமல் அவர் தடுமாறிய போதும், முருக பக்தனாக அவரின் இயல்பில் எந்த மாற்றமும் இல்லை. முதலில் கட்டுமஸ்தான உடலை நன்றாக பேணினார். மது மாது போன்ற பழக்கம் அவரிடமில்லை. பொய் அடிதடி போன்ற சர்ச்சைகளில்லை. இப்படி வறுமையோடு போராடி முருகனை மனமார நினைந்த பொழுது தான் அவருக்கு அதிர்ஷ்டம் எம்ஜிஆர் உருவில் வந்தது.
ஆம், கோவையில் ஜூபிடர்ஸ் பட நிறுவனம் வந்தது. அதில் எம்ஜிஆர், நம்பியார் உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களுடன் சண்டை நடிகர் எனும் வகையில் அறிமுகமனார் தேவர். அவரின் சண்டை நுணுக்கமும், ஆஜானுபாகுவான தோற்றமும், முருக பக்தியும், முக்கியமாக ஒழுக்கமும் எம்ஜிஆரை கவர்ந்தன. இருவரும் நண்பர்களானார்கள். தேவர் புது தன்னம்பிக்கை பெற்றார். எம்ஜிஆருடன் அவர் சகோதரன் போல் பழகினார். எம்ஜிஆருக்கு ஒரு அபூர்வ குணம் இருந்தது, அது அவரின் அபரிமிதமான உள்ளுணர்வு இருந்தது. அதாவது ஒரு மனிதரை பார்த்தவுடன் அவரை கணித்து அவரை தன்னோடு வைக்கலாமா விலக்கலாமா என்று தேர்ந்தெடுக்கும் திறமை தான் அந்த சிறப்பு குணம்.
எம்ஜிஆர் சினிமாவிலும் அரசியலிலும் உச்சம்பெற அதுதான் காரணம். அப்படிபட்ட எம்ஜிஆர் தேவரின் முதல் படத்தில் நடிக்க சம்மதித்தார், தேவர் தயாரிப்பாளரானார். வெறும் 10 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சென்னை வந்து மார்வாடிகளும் செட்டிகளும் லட்சங்களை கொட்டும் தொழிலில் சட்டை போடா வேட்டி கட்டிய பாமரனாக முருகன் மேல் பாரத்தை போட்டு படமெடுத்தார் தேவர்.
எம்ஜிஆர் ஒத்துழைப்பில் "தாய்க்கு பின் தாரம்" படம் 1956ல் வந்தது. அது தேவருக்கு பெரும் புகழை பெற்று கொடுத்தது. மருதமலை ஆலயத்துக்கு அனுதினமும் ஏறி அழுத பலனை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றார் தேவர். ஆம் முருகன் அவரை கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் படிகளில் ஏற்றினான். எம்ஜிஆரும் அவரால் வளர்ந்தார். தாய்க்கு பின் தாரம் என தொடங்கிய வெற்றி கணக்கு பின் மிக அதிரடியாக தாய் சொல்லை தட்டாதே, வேட்டைக்காரன் என தொடர்ந்தது. சரோஜாதேவியினை இங்கு அறிமுகபடுத்தியது தேவர் தான்.
‘தாயைக் காத்த தனயன்', குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்குப்பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். ஜொலித்தார். தேவருக்கு கோடிகள் கொட்டின. தேவர் பிலிம்ஸ் தயாரித்த 16 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். எம்.ஜி.ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்தவர் தேவர்தான். எல்லோரையும் "முருகா" என வாய்நிறைய அழைத்த தேவர் ராம்சந்திரனை முருகன் வடிவாகவே மனமார அழைத்தார்.
1970க்கு பின் தேவரின் படங்களில் மிருகங்கள் தலைகாட்டின. ஆம் சிங்கம், புலி, யானை, ஆடு என எல்லாவற்றையும் நடிக்க வைத்தவர் அவர் தான். தேவரின் மிக சிறந்த பங்களிப்பு அவரின் பக்தி வேறு படம் வேறு என இருந்ததே இல்லை. கடைசிவரை தன் படங்களில் இந்து பக்தியினை சொல்லி கொண்டே இருந்தார். 'துணைவன்’, 'தெய்வம்' 'வெள்ளிக்கிழமை விரதம்' ’வேலும் மயிலும் துணை' என மிகசிறந்த பக்தி படமெல்லாம் கொடுத்தார். அவரின் மிகச்சிறந்த பணி தன் படங்களில் கிருபானந்தவாரியார் சுவாமிகளை நடிக்க வைத்தது.
ஆத்திகம் தமிழகத்தை ஆளவந்த காலத்தில் அதுவும் சினிமா ஒன்றையே பிரதானமாக கொண்ட காலத்தில் தன் சினிமாவில் ஆத்திகம் பேசியவர் தேவர். ராமனையும், மீனாட்சியையும் காமாட்சியையும் கொச்சையாக பலர் விமர்சித்த பொழுதும், அப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் தன் படங்களில் குன்னகுடி வைத்தியநாதன், கண்ணதாசன் என நடிக்க வைத்து தன்னால் முடிந்த அளவு ஆத்திகம் வளர்த்தவர் அவர்.
ராமசந்திரன் முதல்வரான காலத்தில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்தை சரியாக அடையாளம் கண்டவர் தேவர் தான். சாண்டோ சின்னப்ப தேவர் என்பவர் ஒரு சாமான்யம் அல்ல. அவர் ஒரு அதிசயம். நம்பமுடியா ஆச்சரியம். சாதாரண குஸ்தி பள்ளியின் வாத்தியார் ஒருவர் சினிமாவுக்கு செல்வதும் அங்கு தயாரிப்பாளராக நிலைப்பதும் சாதாரணம் அல்ல. அதுவும் ஏகப்பட்ட வெற்றிபடங்களை கொடுத்து நிலைத்ததும் சாதாரணம் அல்ல. ஒரு தமிழக கிராமத்தான் மும்பைக்கு சென்று திலிப்குமாரை நடிக்க வைக்க சாக்கு மூட்டை நிறைய பணத்தை கட்டி கொண்டு சென்று அவர் முன்னால் கொட்டியதும் சாதாரண விஷயம் இல்லை.
சாதாரண குஸ்தி வாத்தியார் கலைத்துறையில் நுழைந்து படங்களை மக்கள் ரசனைக்கேற்ப எடுத்து, பாடல் காட்சிகள் இன்னும் சுவாரஸ் விஷயங்களை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற தெல்லாம் மிகச்சிறந்த அபூர்வமான விஷயங்கள். அதெல்லாம் முருகன் கொடுத்த வரம். கடைசி வரை மேல் சட்டை அணியாத அணிய தெரியாமல் வெறும் நாரியலை மட்டும் சூடி திரிந்த அந்த அப்பாவி மனிதன் சாதித்ததெல்லாம் முருகன் அருளே. திரைத்துறையில் மது மாது என எந்த கெட்ட வழக்கமும் இல்லாமல் இருந்த மகா உத்தமர்களில் அவருக்கே எப்பொழுதும் முதலிடம். அவரால் எத்தனையோ பேர் வாழ்ந்தார்கள், எம்ஜிஆர் முதல் கண்ணதாசன் வரை பலரும் வெளிப்படையாக வாழ்ந்தார்கள். இன்னும் மறைமுகமாக வாழ்ந்தவர்கள் ஏராளம். ஒரு அமாவாசைக்கு பூஜை போட்டு அடுத்த அமாவாசை தாண்டி வரும் 40 நாளுக்குள் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது எப்படி எனும் நுணுக்கத்தை அவர் தான் கற்றுக் கொடுத்தார். அவரின் வெற்றிக்கு இப்படி நுணுக்கமான உழைப்பே பெரும் காரணம்.
அவரால் வாழ்ந்தவர்கள் கோடி உண்டே தவிர, தேவரால் தாழ்ந்தவர்கள் என ஒருவரை கூட எங்கும் காட்டமுடியாது. அதுவும் சினிமாத்துறையில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கும். காசு ஒன்றுக்காக எது எல்லாமோ நடக்கும். அத்துறையில் தேவர்மேல் யாரும் கடைசி வரை ஒரு குறை சொல்லமுடியாது. மிக நேர்மையான முறையில் தான தர்மத்தோடு தொழிலை அவர் செய்து கொண்டிருந்தார். ஒரு படத்தின் லாபத்தினை நான்காக பிரித்து கொள்வார் தேவர். அதில் ஒரு பகுதி முருகனுக்கு செல்லும். அவனை கடைசி வரை தன் பங்காளியாக வைத்திருந்தார். ஒரு பகுதி குடும்பம், ஒரு பகுதி நல்லகாரியங்கள் என்றும் செல்லும் ஒரு பகுதிதான் அடுத்த படத்துக்கு செல்லும். முருகனுக்கு அவர் அள்ளிகொடுத்த திருப்பணிகள் ஏராளம். மருதமலை முதல் திருச்செந்தூர் மண்டபம் வரை சாட்சிகள் இன்றுவரை உண்டு.
எப்பிறப்பிலோ முருகனின் அடியாராக வாழ்ந்த ஆத்மா ஒன்று இப்பிறவியில் மருதமலை அடியானாக பிறந்து தமிழகத்தின் உன்னத இடத்தை அடைந்து முருகனுக்கோர் அடையாளமாக தேவர் உருவத்தில் நின்றது. ஆன்மீகத்தில் கிருபானந்தவாரி போலவே லவுகீக வாழ்வில் சின்னப்ப தேவர் முழு முருகபக்தனாய் அடையாளமாய் நின்றார்.
சாண்டோ சின்னப்ப தேவர் எனும் பெருமகன் மறக்க கூடியவன் அல்ல. அவனால் வாழ்வு பெற்றவர்களில் எம்ஜிஆர் பல இடங்களில் அதை வாய்விட்டு சொன்னார். தேவர் இல்லாவிட்டால் நான் இல்லை என்பதை நன்றியோடு சொன்னார். கண்ணதாசன் "கம்பனுக்கோர் சடையப்பன் எனக்கோர் சின்னப்பன்" என அதற்குமேல் வார்த்தையின்றி சொன்னார். இதெல்லாம் ஏதோ ஒரு தெய்வத்தால் இல்லை முருகனால் நடத்தபட்ட காட்சிகள், மிக சரியான காலத்தில் அவரை சரியாக நடத்திய தெய்வம். தேவர் தொட்டதையெல்லாம் துலங்க செய்து மிகபெரிய இடத்தில் வைத்தது.
வாழ்வில் எதற்கும் கலங்காத தேவர் கலங்கிய இடம் ஒன்று உண்டு. அது தேவரின் "தெய்வம்" படத்தின் பாடல் உருவான காட்சி, எல்லோரும் அமர்ந்திருக்கின்றார்கள். காட்சி விளக்கபடுகின்றது. பக்தன் ஒருவன் முருகனை நோக்கி, முருகா நீயே அடைக்கலம் தேவருக்கும் மனிதருக்கும் இவ்வுலகுக்கும் நீயே அடைக்கலம் என பாடும் காட்சி அது. தேவரை பார்க்கின்றார் கண்ணதாசன், அவரின் வாழ்வு முழுக்க அறிந்தவர் அவர்.
அப்படியே தேவரின் பின்னால் இருக்கும் மருதமலை முருகனையும் காண்கின்றார். பாடல் பிறக்கின்றது. கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்தமலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை" ‘‘மருதமலை மாமணியே முருகையா" அந்த வரிக்கு தேவரின் முகம் மெல்ல கலங்கிற்று
. "தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா" என்று கண்ணதாசன் பாடிய போது, அவரை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தார் தேவர். ஆம், அந்த வரி வானலோக தேவர்களுக்கானது அல்ல, முழுக்க சின்னப்ப தேவருக்கானது. அதை புரிந்து வரியாய் வைத்தார் கண்ணதாசன். தேவரின் தோற்றத்தினை அதாவது குங்குமம் சந்தனமெல்லாம் சூடி அவர் நிற்கும் அழகையும் தைபூச பண்டிகையினை அவர் கொண்டாடும் தோரணையினையும் அழகாக பதிந்து வைத்தார் கண்ணதாசன். அது அந்த முருகனே கண்ணதாசன் மனதில் புகுந்து தேவருக்காக எழுதிய பாடல்.மருதமலை ஆலயம் உள்ளவரை அவனியில் தேவர் பெயரும் நிலைத்திருக்கும், அவர் புகழுக்கு முடிவே இல்லை.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu