அடி வாங்கும் அரசுத்துறைகள் கொந்தளிக்கும் ஊழியர்கள்

அடி வாங்கும் அரசுத்துறைகள் கொந்தளிக்கும் ஊழியர்கள்

பைல் படம்

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிவாங்கவே சில அரசுத்துறைகள் உள்ளன. சில துறைகள் செல்வச்செழிப்பில் கொழிக்கின்றன.

தனியார் துறைகளில் நடக்கும் கொடுமைகளுக்கு பயந்து தான் நடுத்தர மக்கள் தங்கள் உயிரை கொடுத்து படித்தாலும், பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து அரசுப்பணியில் சேருகின்றனர். ஆனால் அரசுத்துறைகளில் இரட்டை நிர்வாகம் இருந்து வருகிறது. ஆமாம் செல்வச் செழிப்பில் கொழிப்பதற்கு என சில பணக்கார அரசுத்துறைகள் உள்ளன. அதிகாரிகளிடம் அடிவாங்கி சாகவே சில அரசுத்துறைகள் உள்ளன.

அதிகாரிகள் பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க சில அரசுத் துறைகளை வைத்துள்ளனர். காரணம் இந்த துறைகளில் கை வைத்தால் எந்த ஒரு பெரிய அதிகாரியும் பல மடங்கு பிரபலம் ஆகலாம். சில அரசுத்துறைகளை தொட்டால் அந்த அதிகாரியே காணாமல் போவார். இது தான் இன்றைய நிதர்சனம்.

அடிவாங்கும் அரசுத்துறைகளில் முதலிடம் பெறுவது கல்வித்துறை. கல்வித்துறையில் யாரும் மறைமுகமாக சம்பாதிக்க வே முடியாது. இதனால் ஆசிரியர்கள் முதல் கிளரிக்கல் ஸ்டாப், மற்றும் சத்துணவுப்பணியாளர்கள் வரை அடி வாங்குவ தற்கு என்றே வளர்க்கப்படும் ஆடுகள். இவர்களை அடித்தால் அந்த செய்தி சட்டென பரவி விடும். அடித்த அதிகாரி எவ்வளவு கொடுமைக்காரராக இருந்தாலும், சில நிமிடங்களில் பெரிய ஹீரோவாகி விடுவார்.

கல்வித் துறை என்பது கல்வித்துறை, சத்துணவுத்துறை, ஊட்டச்சத்து துறை, மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளை நிர்வகிப்பவர்கள் என அத்தனையும் அடங்கியது என்பதை மறந்து விடக்கூடாது. இவர்கள் அதிகாரிகளிடம் அடிவாங்க பிறந்தவர்கள். அத்தனை துறைகளின் சுமைகள் இவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சிறு தவறுக்கு கூட இவர்கள் மிகப்பெரும் ஆபத்தில் நொடிப்பொழுதில் சிக்கும் அபாயம் உள்ளது.

இங்கு பணிபுரியும் பெண்கள் மனதிற்குள் அழும் அழுகுரல்கள் இதுவரை ஆட்சியாளர்களுக்கு எட்டவில்லை. இந்த துறையில் ஆசிரியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை நடக்கும் விஷயங்களை மட்டும் முதல்வர் ரகசிய ஆய்வு மூலம் கண்டறிந்தால் மிகவும் அதிர்ச்சியாகி விடுவார். நிச்சயம் முதல்வர் கவனத்திற்கே செல்லாத பல விஷயங்கள் கல்வித்துறையில் நடக்கின்றன.

இரண்டாவது ரேஷன் கடை. ரேஷன் ஊழியர்கள் படும் பாட்டை எழுதினால் பல பக்கங்களுக்கு எழுத வேண்டும். அந்த அளவு அவர்கள் தினம், தினம் செத்துப் பிழைக்கின்றனர். ஒரு ரேஷன் கடையை ஆய்வு செய்ய 16 அடுக்குகள் கொண்ட அதிகார வர்க்கம் உள்ளது. ரேஷன் கடையில் என்ன தான் அரிசி, பொருட்கள் கடத்தினாலும் மாதம் எத்தனை நுாறு ரூபாய்கள் சம்பாதித்து விட முடியும். அந்த சம்பாத்தியமும் அதிகாரிகளுக்காக சம்பாதித்து கொடுக்கப்படுகிறது என்பது தான் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ரேஷன் ஊழியரை பழித்தால் அதுமிகப்பெரிய பாவமாகி விடும். அவர்கள் அவ்வளவு துயரங்களை அனுபவிக்கின்றனர்.

மூன்றாவது இடத்தினை பிடிப்பது ஊரக வளர்ச்சித்துறை. இவர்களிடம் லஞ்சம் பெறுபவர்களின் பட்டியலே எழுதினாலே பல நுாறு அடி துாரம் நீளும். இங்கு ஆய்வுக்கு செல்பவர்கள் எல்லாமே துப்புரவு பணியாளர்களை தான் துாற்றுவார்கள். தினம் நுாறு ரூபாய் சம்பளத்திற்காக அவர்கள் படும் அசிங்கங்களை வார்த்தைப்படுத்தவே முடியாது. கிராம ஊராட்சி கிளர்க்குகளை போன்ற பாவம் செய்த பிறவிகளே இனி பிறக்க முடியாது.

உண்மை நிலையை தான் சொல்கிறோம். ஏதாவது ஒரு கிராம ஊராட்சி கிளர்க்கிடம் அவர்கள் வாழ்வியலை விசாரித்துப் பாருங்கள். அவர்கள் தண்ணீருக்குள் அழும் மீன்கள். இதே போல் ஊரக வளர்ச்சித்துறையில் நுாற்றுக்கணக்கான பணியி டங்களில் சிக்கி ஊழியர்கள் பரிதவிக்கின்றனர். கிராமங்களில் நடக்கும் வளர்ச்சிப்பணிகளில் யாரோ சம்பாதிக்க... யாரோ தண்டனை அனுபவிப்பார்கள். உள்ளாட்சித் துறைகளின் நிலையும் இப்படித்தான். இப்படி அழும் துறைகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அடுத்து செல்வச்செழிப்பில் சிக்கி தவிக்கும் துறைகள். சவால் விட்டு சொல்லலாம். இவர்களை எந்த ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் தொடக்கூட முடியாது. தொட்டால் அவர்கள் பணியில் தொடர முடியாது. உங்களுக்கே தெரியும். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலாவது எந்த கலெக்டரோ அல்லது பிற அதிகாரிகளோ டாஸ்மாக் கடையை ஆய்வு செய்து பார்த்துள்ளீர்களா. ஒரு ஊரில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இருந்தால், இருபது இடங்களில் கள்ளத்தனமாக மது விற்கின்றனர். இவர்களை இதுவரை யாரும் கட்டுப்படுத்தவே இல்லையே. 24 மணி நேரமும் தமிழகத்தில் பல இடங்களில் மதுபாட்டில்கள் வாங்கலாம்.இது போலீசாருக்கும் தெளிவாக தெரியும். எதுவும் செய்ய முடியாது என்பதும் அவர்களுக்கு தெரியும்.

பொதுப்பணித் துறையில் கட்டடம் கட்ட தனிப்பிரிவு உள்ளது. கண்மாய்கள் இதர நீர் நிலைகளை பராமரிக்க தனிப்பிரிவு உள்ளது. கனிமவளத்துறை என ஒன்று உள்ளது. இவர்களை ஆய்வு செய்தால், ஆய்வுப்பணி முடிந்து வெளியேறும் முன்பே மாறுதல் உத்தரவு அந்த அதிகாரியின் கைக்கு தேடி வந்து விடும். இதே பட்டியலில் தான் நெடுஞ்சாலைத்துறையும் உள்ளது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் பத்திரப்பதிவுத்துறை. ரியல் எஸ்டேட்களுக்கு அப்ரூவல் வழங்கும் டி.டி.சி.பி., துறை...(இத்துறையில் நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப பல கோடிகளை கப்பம் கட்ட வேண்டும்). அப்பப்பா... இங்கு எந்த பணிக்கு எவ்வளவு கமிஷன் என பட்டியலே தைரியமாக பிரிண்ட் செய்து வைத்துள்ளனர். இந்த துறை மீது யாராவது கை வைத்து பாருங்களேன்.

விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறைக்கு வரும் பல ஆயிரம் கோடி மானியங்கள் எங்கு செல்கின்றன என்று யாராவது ஆய்வு செய்து பார்த்தது உண்டா. ஒரு சர்வேயரையாவது ஒரு கலெக்டரால் வேலை வாங்க முடியுமா? கலெக்டராலே சர்வேயரை வேலை வாங்க முடியாத போது, பாவம் மக்கள் என்ன செய்வார்கள். நிலத்தின் விலைக்கு ஈடாக பணம் கொடுத்து பல நாள் இல்லை.. பல மாதங்கள் இல்லை...பல வருடங்கள் அலைந்து பட்டா வாங்க வேண்டும். இதில் பல நாடகங்கள் வேறு நடக்கும்.

இது போல் பல துறைகள் உள்ளன. அப்படியானால் இங்கெல்லாம் ஆய்வு கிடையாதா என கேட்காதீர்கள். ஆய்வு செய்வார் கள். ஆய்வு செய்தது போல் ஆவணங்கள் தயார் செய்வார்கள். அதிகாரிகள் கூழைக்கும்பிடு போட்டு கையெழுத்து போடு வார்கள். ஆக உண்மையில் தினமும் பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர். உயர் அதிகாரிக ளுக்கு லஞ்சம் கொடுக்க சிறு, சிறு தவறு செய்பவர்கள் தினமும் பிரம்படி வாங்குகின்றனர். (தவறுகளை நியாயப்படுத்தவில்லை. நிர்வாக சமநிலை வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம்)

அடித்து துவைக்கத்தான் சில அப்பாவிகள் உள்ளனரே... அரசுத்துறைகளின் இந்த பாகுபாட்டை எண்ணி அரசுஊழியர்களே பலர் கொந்தளித்து வருகின்றனர். பாவம் அவர்களால் அழ மட்டுமே முடியும் என்பது தெரியாது போல. தொடர்ச்சியாக இருபத்தி ஐந்து ஆண்டுகள் தி.மு.க.வை ஆட்சிப்பீடத்தில் வைத்திருப்பேன் என சபதம் ஏற்று முதல்வராக அமர்ந்திருக்கும் ஸ்டாலின் அரசுத்துறைகளில் உள்ள நிர்வாக பாகுபாட்டை களைந்து அரசு ஊழியர்களின் மனஉலைச்சலுக்கு தீர்வு காண வேண்டும். அப்பாவி அரசுத்துறைகளை உயர் அதிகாரிகளின் சாட்டையில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

Tags

Next Story