சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறப்பு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு  வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை குறைந்து வெயில் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த மழை காரணமாக வைகை அணைக்கு விநாடிக்கு 2100 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனத்திற்கும், மதுரை குடிநீருக்கும் சேர்த்து விநாடிக்கு 2569 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வைகை அணை நீர் மட்டம் 64.27 அடியாக இருப்பதாலும், தொடர்ந்து நீர் வரத்து உள்ளதாலும் வரும் வைகை ஆற்றின் பழைய ஆயக்கட்டான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நீர் திறக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் வரும் மார்ச் மாதம் வரை இந்த நீர் வைகை ஆற்றில் தொடர்ந்து திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருஷநாடு மலைப்பகுதிகளிலும், மேகமலைப்பகுதியிலும் மழை தொடர்வதால் வைகை அணைக்கு நீர் வரத்து வரும் பிப்ரவரி மாதம் வரை இருக்கும். பெரியாறு அணையிலும் அதிகளவு நீர் உள்ளது. இதனால் சிவகங்கை, ராமனாதபுரம் பாசனத்திற்கு நீர் வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 141.55 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியதை விவசாயிகள் பலர் வரவேற்றுள்ளனர். ஆனாலும் அணையின் முழு நீர் மட்ட உயரமான 152 அடியை எட்டினால் மட்டுமே அதனை நாங்கள் திருவிழாவாக கொண்டாடுவோம். அதுவரை தமிழகத்தின் உரிமைப்படி நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த போராடுவோம் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 80 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 30 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. அணை முழுமையாக நிரம்பி உள்ளதால் அணைக்கு விநாடிக்கு வரும் 31 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. சண்முகாநதி அணை நீர் மட்டம் 37.19 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் முழுக்க அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் மாவட்டத்தில் மழை குறைந்து விட்டதால், அனைத்து நீர் நிலைகளிலும் நீர் வரத்தின் அளவும், வேகமும் குறைந்துள்ளது. இதனால் பெரியகுளம் கும்பக்கரை அருவி, போடி அணைக்கரைப்பட்டி நீர்வீழ்ச்சி, கம்பம் சுருளிஅருவி, வருஷநாடு சின்னசுருளி அருவிகளில் குளிக்க எந்த தடையும் இல்லை. பயணிகள், பக்தர்கள் வழக்கம் போல் குளிக்கலாம் என வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!