மனிதாபிமானம்... திரைப்பட இயக்குநர் மணிவண்ணன்..
திரைப்பட இயக்குநர் நடிகர் மணிவண்ணன்
திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், நடிகராக உச்சத்தில் இருந்த நேரம். ஆனாலும் எந்தவிதமான பந்தாவும் இன்றி பண்போடும் பக்குவத்தோடும் பரிவோடும் வரவேற்று உபசரித்தார். அப்போதே மணிவண்ணன் மீது எனக்கு பிரமிப்பு கலந்த ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. அந்த மரியாதை இப்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது. அதற்கு காரணம், சமீபத்தில் நான் பார்த்த ஒரு வீடியோ. மணிவண்ணன் சம்பந்தமான ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் அகத்தியன் பேசியது.
அதன் சாராம்சம், இதோ.. அகத்தியன் சினிமாவில் புகழ் பெறுவதற்கு முன், அவர் எழுதிய ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை இயக்குவது சம்பந்தமாக மணிவண்ணனை நேரில் போய் சந்தித்திருக்கிறார். ஒரு சில தொடர் சந்திப்புகளுக்கு பின் ஒரு சிறிய இடைவெளி. அந்த நேரத்தில் ஊரிலிருந்த அகத்தியனின் தந்தை காலமாகி விட்டார்.
ஊருக்கு போக அகத்தியன் கையில் காசு இல்லை. தெரிந்த நண்பர்களிடம் 100, 200 என கடன் வாங்கி, இறுதிச் சடங்குக்கு போய்விட்டு, மீண்டும் சென்னைக்கு வந்த அகத்தியனுக்கு அடுத்து ஒரு சிக்கல். மறுபடி ஊருக்குப் போய் அப்பாவுக்கு 16வது நாள் காரியம் செய்ய வேண்டும். அதற்கு 1500 ரூபாய் பணம் வேண்டும். ஆனால் அகத்தியன் கையில் அப்போது பத்து ரூபாய் கூட இல்லை.
என்ன செய்வது என்று தவித்துப் போனார் அகத்தியன். யார் யாரையோ போய்ப் பார்த்தார் எங்கெங்கேயோ முயற்சி செய்தார். நீண்ட நேர சிந்தனைக்கு பின் மணிவண்ணனை தேடிப் போனார் அகத்தியன். விஷயத்தைச் சொன்னார். மணிவண்ணன் அமைதியாக அமர்ந்து அகத்தியன் சொல்வதைக் கேட்டு கொண்டிருந்தார். "இப்போ நான் என்ன செய்யணும் அகத்தியன் ?" அகத்தியன் தயங்கியபடியே, "வேற ஒண்ணும் இல்ல சார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு நான் உங்களிடம் ஒரு கதை சொன்னேன் அல்லவா ?"
ஆமாம். அந்தக் கதையின் முழு உரிமையையும் நான் உங்களுக்கு எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதிலாக எனக்கு 1500 ரூபாய் கொடுத்து உதவுங்கள், ப்ளீஸ்.. ஒரு சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்தார் மணிவண்ணன். அகத்தியன் கைகளை பிசைந்தபடியே கலக்கத்தோடு காத்திருந்தார்.
இங்கே பாருங்க அகத்தியன்... நிமிர்ந்து பார்த்தார். "எந்த காரணம் கொண்டும் உங்கள் கதையை, என்னிடமோ வேறு எவரிடமோ கொடுத்து விடாதீர்கள். சினிமா உலகில் எப்போது என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் ? ஒருவேளை அந்தக் கதையின் மூலம் நாளையே உங்கள் வாழ்க்கை அடியோடு மாறலாம். அதனால்...ஒரு நிமிஷம் இருங்க அகத்தியன், வந்து விடுகிறேன்." மணிவண்ணன் தன்னுடைய அறைக்குள் போய்விட்டு திரும்பி வந்தார். "இந்தாங்க அகத்தியன். இதில் நீங்கள் கேட்ட 1500 ரூபாய் இருக்கிறது. ஊருக்கு போய் அப்பாவின் காரியங்களை முடித்து விட்டு வாருங்கள்." அகத்தியன் தயக்கத்துடன், "சார் இந்த பணத்தை, நான் உங்களுக்கு...""போய் நடக்க வேண்டிய விஷயங்களை பாருங்கள் அகத்தியன்." நன்றிப் பெருக்குடன் மணிவண்ணன் வீட்டை விட்டு வெளியே வந்தார் அகத்தியன். ஊருக்கு போய் காரியங்களை நல்லபடியாக முடித்து விட்டு வந்தார்.
சில வருடங்கள் கழித்து... மணிவண்ணன் சொன்னது போலவே காலம் மாறியது. அகத்தியனைத் தேடி அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. அகத்தியன் இயக்கிய ஆறு படங்களில் தொடர்ந்து நடித்தார் மணிவண்ணன். ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் அகத்தியனை அருகில் அழைத்தார் மணிவண்ணன்.
ஒரு வேடிக்கையை பார்த்தீர்களா அகத்தியன்..?""என்ன சார் ?""உங்களுடைய ஆறு படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்களே, இதன் மூலம் இதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா ?"அமைதியாக மணிவண்ணன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அகத்தியன்.
75 லட்சம் ரூபாய்.அன்றைக்கு அவசரத்துக்கு உங்களுக்கு நான் கொடுத்தது வெறும் 1500 ரூபாய்.எதையும் எதிர்பார்த்து நான் உங்களுக்கு அதை கொடுக்கவில்லை. ஆனால் காலம் எப்படியெல்லாம் அதை கவனித்துக் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா ?"
அகத்தியன் எதுவும் பேசத் தோன்றாமல் கண்களில் நீர் வழிய மணிவண்ணனின் கைகளை இறுகப் பற்றி கொண்டார். இந்த சம்பவத்தை சமீபத்தில் ஒரு மேடையில் அகத்தியன் சொல்லும்போது, ஏற்கெனவே மணிவண்ணன் மீது எனக்கு இருந்த மரியாதை இன்னமும் பலப்பல மடங்கு உயர்ந்தது.மாபெரும் மனித நேயம் கொண்ட மகத்தான மனம் படைத்தவர் மணிவண்ணன்.
அதே வேளையில்,பிரபஞ்ச சக்தியின் மீது கூட பிரமிப்பு அதிகமானது.பலன் எதுவும் எதிர்பார்க்காமல் மணிவண்ணன் கொடுத்த பணம் 1500 ரூபாய், பல்லாயிரம் மடங்குகள் அதிகமாகி அவருக்கே திரும்ப வந்து சேர்ந்திருக்கிறது.எதை இங்கு நாம் விதைக்கிறோமோ அதை பல மடங்கு திரும்ப நமக்கு கொடுத்தே தீரும் இந்தப் பிரபஞ்சம்.து சத்தியமான உண்மை.(நன்றி: நண்பர் செல்லத்துரை )
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu