கூட்டணி முடிவு செய்த பிறகும் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே மீண்டும் மோதல்

கூட்டணி முடிவு செய்த பிறகும் அ.தி.மு.க - பா.ஜ.க இடையே மீண்டும் மோதல்
X

ஜெயகுமார்(பைல் படம்)

தமிழக பாஜக அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லையா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையில் கருத்து முரண் நிலவி வந்தது. ஒருகட்டத்தில் அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பினாலே எடப்பாடி பழனிசாமி எரிச்சலும் ஆனார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் நட்டா ஆகியோர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இடையே சமரசமும் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை என எடப்பாடி பழனிசாமியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தன் ட்விட்டர் பக்கத்தில், “பாஜக கேட்கும் இடத்திலோ, அதிமுக கொடுக்கும் இடத்திலோ இல்லை. மத்தியில் ஆளப் போவது மோடி. அந்த அரசின் பிரதிநிதி தமிழ்நாட்டில் இருப்பதே நல்லது. கூட்டணி என்று வந்தால் 25 சீட்டுக்கு குறைவில்லாமல் தந்தாலே ! இல்லாவிட்டால் தனியாகவே ! என பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக பாஜகவினர் அண்ணாமலை கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இதுகாட்டுகின்றது. பாஜகவுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என அதிமுகவினருக்குத் தெரியும். ஆனால் வேண்டாம் என்றுதான் அடக்கி வாசிக்கின்றோம். இந்த விவகாரத்திற்கு அண்ணாமலை விளக்கம் தரவேண்டும். இல்லாவிட்டால் அவர் சொல்லித்தான் பாஜகவினர் விமர்சிப்பதாக நினைக்க வேண்டி வரும். பாஜக பொருளாளரின் இந்த விமர்சனம் அண்ணாமலைக்கு தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என அவர் ஊடகத்தின் முன்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil