தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
X

வைகை அணை.

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான பருவநிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண நிலையில் கூட 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவே பருவநிலையின் குளிர்ச்சி காணப்படுகிறது.

நேற்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இரவு முழுவதும் மிதமான மழை பதிவானது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 5.8 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 4 மி.மீ., வீரபாண்டியில் 7.2 மி.மீ., பெரியகுளத்தில் 5.5 மி.மீ., மஞ்சளாறில் 3 மி.மீ., சோத்துப்பாறையில் 6 மி.மீ., வைகை அணையில் 2.8 மி.மீ., போடியில் 9.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 5.8 மி.மீ., கூடலுாரில் 10.2 மி.மீ., பெரியாறு அணையில் 78 மி.மீ., தேக்கடியில் 31 மி.மீ., சண்முகாநதியில் 7.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

பெரியாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் நீர் வரத்து விநாடிக்கு 1350 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து மேலும் அதிகரித்துக் கொண்டே வரும் என கூறப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 117.55 அடியாக உள்ளது. இன்று இரவுக்குள் நீர் மட்டம் 118 அடியை தொட்டு விடும். அந்த அளவு மழை அதிகம் பெய்துள்ளது.

வைகை அணைக்கான நீர் வரத்தும் விநாடிக்கு 350 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்னும் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகளே உள்ளன. வைகை அணையில் இருந்து விநாடிக்கு 472 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் மட்டம் 48.16 அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணை முழுமையாக நிறைந்து (126.26 அடி) மறுகால் பாய்ந்து வருகிறது. சண்முகாநதி அணையும், மஞ்சளாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது. மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக இருந்து வருகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil