அதிமுகவின் மூன்று முக்கிய டார்கெட் எது தெரியுமா

அதிமுகவின் மூன்று  முக்கிய டார்கெட் எது தெரியுமா

பைல் படம்

அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்

அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதில், வரும் 7ம் தேதி தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சில முக்கிய அஜெண்டாக்கள் முன்வைக்கப்பட இருக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் தொடர்ந்து போட்டி நிலவி வந்தது. இந்த போட்டியில் இறுதி சுற்றில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் சட்டப்போராட்டம் நடத்திய நிலையில், ஈபிஎஸ் தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்றும், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்றும் நீதிமன்றம் ஈபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல் காட்டியது.

இந்த வெற்றியை ஈபிஎஸ் தரப்பினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதே வேகத்தில் கட்சி வேலையில் ஈபிஎஸ் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதற்காக முதற்கட்ட பணியாகதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இதுதான். எனவே இந்த கூட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது. எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி விவகாரம் போன்றவை வழக்கமாக விவாதங்கள்தான் என்றாலும் கட்சியின் உறுப்பினர் பதிவு முக்கிய அஜெண்டாவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல், அதைத் தொடர்ந்து நடந்த சட்டப் பேரவை தேர்தல் என அனைத்திலும் அதிமுக தனது பலத்தை நிரூபிக்காமல் போய்விட்டது. எனவே இந்த முறை எப்படியாவது தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கட்சி தலைமை தொடர்ந்து போராடி வருகிறது. ஏற்கெனவே ஒற்றை தலைமை குறித்து ஏற்பட்ட பஞ்சாயத்துகளால் கட்சியின் செல்வாக்கை ஒருங்கிணைக்க முடியாமல் நிர்வாகிகள் திணறி வந்தனர். இப்போது இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருந்தா லும், பாஜக தங்களுடன் கூட்டணி இருப்பதை நிர்வாகிகள் மறந்துவிடவில்லை. அதிமுகவின் வாக்கு வங்கி கிடைக்கும் இடைவெளியில் தனது கட்சிக்கான அடித்தளத்தை பாஜக வலுவாக போடத் தொடங்கி விட்டது.

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வென்றதைவிட கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக கூடுதல் இடங்களை வென்றிருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவுக்கு எதிரான ஒரு மனோ நிலை உருவாகியிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதால் இந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி சற்று பயந்துதான் இருக்கிறது. எனவே நாடு முழுவதும் 150 முக்கிய தொகுதிகளை கவனம் செலுத்தியுள்ளது. ஸ்பெஷல் கவனிப்பு இந்த தொகுதிகளுக்கு மத்திய அமைச்சர்களை பொறுப்பாக போட்டு, வேலை வாங்கி வருகிறது. மொத்த 150 தொகுதிகளில் 9 தொகுதிகள் தமிழ்நாட்டில் இருகின்றன. மாநிலத்தில் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் நிச்சயம் தனது வாக்கு வங்கியை பாஜக வுக்கு அது விட்டு கொடுக்காது. ஆட்சியில் இல்லையென்றாலும் கூட திமுக அப்படி செய்யாது அது வேறு கதை..

இப்போது திமுக விட்டுக்கொடுக்கவில்லையெனில் அதிமுக வாக்கு வங்கியில்தான் பாஜக கை வைக்க நினைக்கும். இதிலிருந்து தனது வாக்கு வங்கியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதிமுகவுக்கு இருக்கிறது. அதிமுக இதற்காக அரசியல் ரீதியாக தீவிரமாக இயங்க வேண்டிய தேவை அதிமுகவுக்கு இருக்கிறது. தற்போது வரை பெயருக்குதான் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறதே தவிர, அரசியல் போராட்டங்களை பெரிய அளவில் நடத்தவில்லை என்று மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் உருவாகி இருக்கிறது. இந்த பிம்பத்தை உடைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இனியாவது தீவிரமாக இயங்க வேண்டும்.

அடுத்த சவால் கூட்டணி சாவால். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கூட்டணி பஞ்சாயத்து இந்த தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி தான் காரணம் என்று அதிமுக முக்கிய புள்ளிகள் விமர்சிக்க, அதிமுக ஒன்று சேராததுதான் காரணம் என்று பாஜக விமர்சித்திருந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் எனில் அது தனித்து நின்றால்தான் சாத்தியம் என்று அண்ணாமலை பேசியிருந்து புகைத்துக்கொண்டிருந்த விஷயத்தை பஞ்சாயத்தாக வெடிக்க செய்தது. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி இருக்கிறதா இல்லையா? என்று பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர். இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். இப்படியாக இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு அஜெண்டாக்களும் பெரியதாக விவாதிக்கப்படாது.

ஆனால், மூன்றாவதாக முக்கிய அஜெண்டா ஒன்று இருக்கிறது. உறுப்பினர் பதிவுதான் அது. அதிமுகவில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் 5ம் தேதி முதல் தலைமை கழக அலுவலகத்தில் உறுப்பினர் பதிவு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே நீதிமன்றத்தில், மக்கள் மன்றத்தில் ஒன்னரைக்கோடி தொண்டர்கள் என்று அதிமுக பேசி வருகிறது. எனவே இந்த உறுப்பினர் பதிவில் தங்கள் பலத்தை ஒன்னறை கோடிக்கும் அதிகமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதன்படி மாவட்ட செயலாளர்களுக்கு இத்தனை உறுப்பினர் பதிவு என டார்கெட் கொடுக்கப்படும். இதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் இந்த மாவட்ட செயலர்கள் கூட்டதில் முடிவெடுக்கப்படும். ஆக இதுதான் இனி அதிமுகவுக்கு பிரதான பணி என கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story