கிராமங்களின் எல்லை மரங்களை பற்றி தெரியுமா?
தேனி மாவட்டம், குச்சனுார் செல்லும் வழியில் துரைச்சாமிபுரம் கிராமத்தின் எல்லையை குறிக்கும் வகையில் வளர்க்கப்பட்டுள்ள ஆலமரம். இந்த கிராமத்தில் நான்கு எல்லைகளிலும் இந்த மரம் உள்ளது.
கிராம கோயில்கள், எல்லைக் கோயில்கள், காவல் தெய்வங்களை பற்றி அறிந்திருக்கிறோம். எல்லை மரங்களை பற்றி தெரியுமா. பொதுவாகவே இந்தியா முழுவதும் கிராமங்களுக்கும், பேரூராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும், மாநகராட்சிகளுக்கும் எல்லை வரையரை உள்ளது. இந்த எல்லை வரையரை சுதந்திரத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்டவை.
சுதந்திரத்திற்கு முன்னர் பல ஆயிரம் கிராமங்களில் எல்லை வரையறைக்காக எல்லைக் கல் நடுவார்கள். சில இடங்களில் அரசமரம், ஆலமரம் நடுவார்கள். சில இடங்களில் எல்லைக் கோயில்கள் கட்டுவார்கள். இப்போது கிராமங்களின் வளர்ச்சியால் எல்லைகள் மாறி விட்டாலும், அந்த எல்லைச் சின்னங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, உப்புக்கோட்டை, துரைச்சாமிபுரம், உப்பார்பட்டி, குச்சனுார், கூழையனுார் உள்ளிட்ட பல கிராமங்களில் இன்னும் இந்த எல்லைச்சின்னங்கள் உள்ளன. குறிப்பாக துரைச்சாமிபுரம், பாலார்பட்டி கிராமத்தில் நான்கு திசைகளிலும் ஆலமரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களின் அடியில் சிறு கோயில்கள் உள்ளன. மக்கள் இந்த கோயில் களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்த மரங்கள் விரிந்து படர்ந்து அற்புதமான ஒரு நிழல் கொண்ட சூழலை வழங்குகின்றன. பகல் முழுக்க வெயிலில் உழைத்து களைத்து வரும் மக்கள் இந்த மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக் கின்றனர். அதே நேரம் இந்த மரங்களின், அதன் அடியில் உள்ள கோயில்களின் புனித தன்மை யை பாதுகாக்கின்றனர்.
இது குறித்து துரைச்சாமிபுரத்தை சேர்ந்த பெரியசாமி கூறுகையில், இந்த மரங்கள் எப்படியும் இரண்டு நுாற்றாண்டுகளை தாண்டியிருக்கும். இந்த பகுதி கிராமங்களில் இது போன்ற ஆலமரங்களும், கோயில்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அந்த கால மக்களின் அற்புதமான வாழ்வியல் முறைக்கு இந்த மரங்களே மிகப்பெரிய சான்று ஆகும். இயற்கையை நேசித்தால், நிச்சயம் நல்வாழ்வு கிடைக்கும் என்பதற்கு அந்த மக்களும், அவர்கள் வளர்ந்த மரங்களுமே சாட்சி. இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu