விவசாய கூலி பெண்களின் உணவு முறை பற்றி தெரியுமா?
ஏழை கூலி பெண்களின் உணவுக்காக சைடிஸ் ஆக விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட மாங்காய் மற்றும் கருவாடு பாக்கெட்டுகள்.
விவசாயம் கடும் நெருக்கடிக்குள் இருந்தாலும், இன்னமும் விவசாய தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. விவசாய தொழிலாளர்களில் பெண்களின் எண்ணிக்கை தான் ஆண்களை விட பல மடங்கு அதிகம். விவசாயம் இயற்கையோடு சேர்ந்து வாழும் அற்புத வாழ்க்கை தான். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் விவசாயம் முழுக்க கடுமையான உழைப்பினை அடிப்படையாக கொண்டது.
அப்படி உழைக்கும் விவசாய பெண்கள் என்ன தான் சாப்பிடுகின்றனர். தெரியுமா? இவர்கள் அதிகாலை 6 மணிக்கு முன்னர் தோட்டத்திலோ, காட்டிலோ, வயலிலோ இருக்க வேண்டும். அப்படியானால் காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். காலை 3.30 மணி அல்லது நான்கு மணிக்கு எழுந்தால் மட்டுமே, அவர்களுக்கும், குடும்பத்திற்கும் தேவையான காலை உணவு, மதிய உணவுகளை தயாரித்து வைத்து விட்டு, தாங்களும் எடுத்துச் செல்ல முடியும்.
அதிகாலை எழுந்து இயற்கை உபாதைகளை முடித்து விட்டு, சோறு சமைக்க மட்டுமே நேரம் இருக்கும். சோறு சமைத்து விட்டு, இவர்கள் தயிர் அல்லது மோர் எடுத்துக் கொண்டு, செல்வார்கள். வழியில் சாப்பாட்டுக்கு தேவையான சைடிஸ்களை வாங்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு சைடிஸ் விற்கவே சிறு பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் காலை 4 மணிக்கெல்லாம், குளித்து முடித்து பிரெஸ்ஸாக கடை திறந்து சாமி கும்பிட்டு முடித்திருப்பார்கள்.
இவர்கள் வாங்கும் சைடிஸ்கள் ஆச்சரியமானவை. ஆமாம் மாங்காயை சீவி, உப்பு, மிளகாய் பொடியில் ஊற வைத்து பாக்கெட்டில் அடைத்து வைத்திருப்பார்கள். சிறிய ரக கருவாடுகளை எண்ணெய்யில் பொறித்து உப்பு மிளகாய் பொடி போட்டு கலந்து பாக்கெட் போட்டு வைத்திருப்பார்கள். ஒரு பாக்கெட் 5 ரூபாய் தான். இவர்கள் 10 ரூபாய்க்கு இரண்டு பாக்கெட் வாங்குவார்கள். ஒன்று காலை உணவுக்கான சைடிஸ். இரண்டாவது மதிய உணவுக்கான சைடிஸ்.
காலை 4 மணிக்கு எழுந்தாலும், அந்த நேரமே சமைத்தாலும், இவர்கள் காலை 9 மணிக்கு தான் சாப்பிட நேரம் கிடைக்கும். குறைந்தது 3 மணி நேரம் தோட்டங்களில் வேலை செய்த பின்னர் தான் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டு முடித்த பின்னர் மீண்டும் விவசாய பணி. மதிய உணவு சாப்பிட மதியம் 2 மணி அல்லது 3 மணி ஆகி விடும். அன்றைய பணியினை முடித்து விட்டு தான் மதிய உணவு சாப்பிடுவார்கள். இப்படி சமைத்ததை சூடாக சாப்பிட முடியாமல், வெகு நேரம் கழித்து சாப்பிடுவதால் தான் இவர்கள் தயிர் அல்லது மோரை துணையாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆக ஒரு நாளைக்கு 10 ரூபாய் சைடிஸ்சில் இரண்டு வேளை உணவு முடிந்து விடுகிறது.
மாலை வீடு திரும்பும் போது, தோட்டத்தில் கிடைக்கும், காய்கறிகள், கீரை வகைகளை கொண்டு வருவார்கள். தினமும் ஒரு வகை கிடைக்கும். அதனை வைத்து இரவில் சோறுக்கு ஆமாம், விவசாய தொழிலாளி வீடுகளில் மூன்று வேளையும் சோறு தான் உணவு. அந்த காய்கறிகளை வைத்து குழம்பு வைத்து விடுவார்கள். இந்த உணவை தான் விவசாய தொழிலாளர்களின் குழந்தைகளும், குடும்ப உறுப்பினர்களும் சாப்பிடுகின்றனர்.
இட்லி, தோசை என்பது இவர்களுக்கு எப்போதாவது ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை, அதுவும் பெண்கள் வேலைக்கு விடுமுறை விட்டு வீடுகளில் இருக்கும் போது சமைக்கப்படும் பணக்கார உணவு. இட்லி, தோசையே வாரம் ஒருமுறை என்றால், ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் இவையெல்லாம் மாதம் ஒருமுறை சமைக்கப்படும் மிக, மிகப்பணக்கார உணவுகள். இப்படி எளிய வாழ்க்கை வாழும், விவசாய தொழிலாளர்கள் தங்களின் கடும் உழைப்பினை சிந்தி, நாட்டு மக்களுக்கு விதவிதமான உணவு வகைகளை சாகுபடி செய்து வழங்குகின்றனர் என்றால் மிகையாகாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu