தமிழக- கேரள முதல்வர்களின் நட்பு: 40ஆண்டு கஷ்டத்திற்கு விடியலை தருமா? ஏக்கத்தில் விவசாயிகள்

தமிழக- கேரள முதல்வர்களின் நட்பு: 40ஆண்டு கஷ்டத்திற்கு விடியலை தருமா? ஏக்கத்தில் விவசாயிகள்
X
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இடையே பெரிய அளவிற்கு இணக்கமான செயல்பாடு நீடித்து வருவது சிறப்பானது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இடையே பெரிய அளவிற்கு இணக்கமான செயல்பாடு நீடித்து வருகிறது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக, பெரியாறு தண்ணீரில் பாசனம் பெற்று வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தரிசாகக் கிடக்கிறது. இரு முதல்வர்களும் சந்தித்து இது பற்றி பேசினால் தமிழகத்திற்கு விடியல் கிடைக்கும் என பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இ.சலேத்து, பொன் காட்சிக் கண்ணன், தேவாரம் சுகுமார், அன்வர் பாலசிங்கம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னையில் நடந்த முதல்வர் ஸ்டாலினின் தன் வரலாறு நூலான "உங்களில் ஒருவன்" நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு, மிகச் சிறந்த உரையையும் வழங்கினார். கூட்டாட்சித் தத்துவத்திற்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம், தமிழக முதல்வர் ஸ்டாலின் அரண் போல நின்று கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதாக சான்று பகர்ந்தார்.

நிகழ்வு மேடையில் பிரனாய் விஜயனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தமிழகத்துக்கு காம்ரேட்களுக்கு மட்டுமல்ல, தேசிய அளவிலும் நம் முதல்வர் மீதான மரியாதையை உயர்த்தியது. முல்லைப் பெரியாறு பிரதான அணையிலிருந்து, பேபி அணைக்குச் செல்லும் வழியிலுள்ள 15 மரங்களை வெட்டுவதற்கான உத்தரவு குறித்து, கேரள மாநில முதல்வருக்கு நம்முடைய முதல்வர் எழுதிய நன்றி கடிதமோ, அதனால் ஏற்பட்ட சங்கடங்களோ துளிகூட இந்த நிகழ்வில் எதிரொலிக்கவில்லை.

இந்த நிகழ்வில் கிடைத்த உபசரிப்பில் மயங்கிப்போன காம்ரேடுகள், கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடக்க இருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நம்முடைய முதல்வருக்கு அழைப்பு கொடுத்தனர்.

தோழர்களோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும் நம்முடைய முதல்வர் அவர்களும்,அந்த அழைப்பை ஏற்று "மத்திய- மாநில உறவுகள்" என்கிற தலைப்பில் பேசுவதற்காக மாநாடு நடந்த கண்ணூருக்கு வந்து சேர்ந்தார்.

தமிழகத்தில் கேரள மாநில முதல்வருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை விட, பத்து மடங்கு வரவேற்ப்பை கூடுதலாக கொடுத்தார்கள் கேரளத்து காம்ரேட்கள். இருக்காதா பின்னே... தமிழகத்திலிருந்து 4 இடதுசாரிகள் நாடாளுமன்றம் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் அல்லவா. இந்த நான்கு இடதுசாரிகளும் நாடாளுமன்றத்திற்கு செல்ல வில்லை என்றால், ஆலப்புழா நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயித்த ஆரிப் முகமது மட்டுமே இடதுசாரிகளின் ஒற்றை எம்.பி யாக நாடாளுமன்ற மக்களவையில் அமர்ந்திருப்பார்.

கண்ணூறு விழா மேடையில் நம்முடைய முதல்வரின் பேச்சு பலத்த வரவேற்பைப் பெற்றது. மலையாளத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசிய நம்முடைய முதல்வர், திராவிட இயக்கத்திற்கும் கம்யூனிஸ இயக்கத்திற்குமிடையேயான நட்பு என்பது 80 வருடம் பழமையானது என்று ஆரம்பித்து, சங்க காலம் தொட்டே தமிழர்களும் மலையாளிகளும் பின்னிப்பிணைந்து வாழ்வதாகவும், சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் கூட தோழர் பினராயியின் அழைப்பை என்னால் தட்ட முடியவில்லை என்று சொல்லி, முத்தாய்ப்பாய் என் பெயரே ஸ்டாலின், இதைவிட உங்களுக்கும் எனக்குமான நட்புக்கு அடையாளம் தேவையில்லை என்று முழங்கினார். இப்படி இரண்டு மாநில முதல்வர்களும் தத்துவ ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் நெருங்கிவிட்ட நிலையில்,

நாங்கள் வைக்கும் வேண்டுகோள்...

இந்த நல்ல உறவை பயன்படுத்தியாவது, இரண்டு மாநிலங்களுக்குமிடையே இருக்கும் நீர்ச்சிக்கல்களை தீர்ப்பதற்கு இருவரும் முன்வர வேண்டும் என்பதாகும்.

1979 ஆம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக, பெரியாறு தண்ணீரில் பாசனம் பெற்று வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தரிசாகக் கிடக்கிறது.

மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தி தான் 136 அடியில் இருந்து 142 அடியாக தண்ணீரை பெரியாறு அணையில் உயர்த்தி இருக்கிறோம். ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் பெரியாறு அணையை பலப்படுத்தி விட்டு தண்ணீரை 152 அடியாக தேக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் 40 ஆண்டுகள் கடந்தும் அது நடக்காமலேயே இருந்து வருகிறது.

முதல்வரின் மொழியிலேயே சொல்வதானால் சங்க காலம் தொட்டே தமிழர்களும் மலையாளிகளும் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வரும் நிலையில், ஒரு முல்லைப் பெரியாறு பிரச்சனையால் அது சீர் கெட்டு விடக் கூடாது என்று நினைக்கிறோம். எனவே முதல் கட்டமாக தமிழக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான தோழர் பாலகிருஷ்ணனும், கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான தோழர் கொடியேறி பாலகிருஷ்ணனும், ஆக இரண்டு பாலகிருஷ்ணன்களும் அமர்ந்து பேச வேண்டும். அடுத்த கட்டமாக இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் அமர்ந்து பேச வேண்டும்.

ஒரு சுமூக நிலை ஏற்பட்டவுடன், இரண்டு மாநில முதல்வர்களும் சந்தித்து, அன்பை பரிமாறி, அளவளாவி பெரியாறு அணையில் 152 அடியாக தண்ணீரை உயர்த்துவதற்கு ஒப்பமிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய தீராக் கனவு. இதோடு நெய்யாற்றின் கரை இடது கரை கால்வாய், செண்பகவல்லி கால்வாய், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு அணைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் நினைக்கிறோம்.

இந்த நிகழ்வை முன்னெடுக்க கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோருடன் பெரியாறு அணை அமைந்திருக்கும் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வாழூர் சோமன், தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் தம்பிராஜா ஆகியோரை ஒரு நிகழ்வில் அமர வைக்க முடிவு செய்திருக்கிறோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற வரலாற்று வாசகத்தை முன்னிறுத்தி, இணக்கத்தை நோக்கி நடைபயில்வோம். விரைவில் குமுளியில் 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க வைக்க வேலைகளை தொடங்கி விட்டோம். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!