காற்றில் பறந்த உத்தரவு:18ம் பெருக்கினை கொண்டாட குவிந்த பக்தர் கூட்டம்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் நடவடிக்கையாக ஒரு வாரம் கோயில்களை மூடுவதாக அரசு அறிவித்ததை தேனி மாவட்ட பக்தர்கள் கண்டுகொள்ளவில்லை. கிராம கோயில்கள், காவல் தெய்வங்கள், கிராம தேவதைகள், குலதெய்வ கோயில்களில் இன்று பதினெட்டாம் பெருக்கினை கொண்டாட பக்தர்கள் குவிந்தனர்.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வாசலில் வந்து நிற்கிறது. இரண்டாவது அலையின் போது தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியதன் விளைவு, இரண்டாவது அலை கடும் பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது. மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட கடினமாக இருக்கும் என ஒரு பிரிவு நிபுணர்களும், பெரிய தாக்கம் இருக்காது என மற்றொரு பிரிவு நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அரசு இம்முறையும் ஏமாந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் உள்ளது. எனவே, தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆடி கொண்டாட்டங்களை தவிர்க்க ஒரு வாரம் கோயில்களை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பினை பெறவில்லை. அரசு அறிவித்தபடி தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாறாக ஆடி பதினெட்டாம் பெருக்கினை கொண்டாட, குல தெய்வ கோயில்கள், கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், கிராம கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். வழக்கம் போல் விளக்கு போடுதல் உட்பட அத்தனை நேர்த்திக்கடன்களையும் செய்தனர். பொங்கல் வைத்தனர். கிடா வெட்டினர். வழிபாடுகளை விரும்பிய வகையில் செய்து முடித்தனர். இதில் தொண்ணுாறு சதவீதம் பேர் மாஸ்க்கையும் கண்டுகொள்ளவில்லை. அனைத்து பஸ்களிலும் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனை தடுக்கவும் முடியாமல், அனுமதிக்கவும் முடியாமல் போலீஸ் நிர்வாகமும், மருத்துவ, சுகாதாரத்துறைகளும் தவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu