எம்.பி.பி.எஸ். படிப்பில் அதிக இடங்களைக் கொண்ட தமிழ்நாடு முதலிடம்..!

எம்.பி.பி.எஸ். படிப்பில் அதிக  இடங்களைக் கொண்ட தமிழ்நாடு    முதலிடம்..!
X

பைல் படம்

நாட்டிலேயே இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது என்று உறுதியாக கூற முடியும். கல்வித்துறையில் வளர்ச்சி காமராஜர் ஆட்சிக்காலத்திலேயே தொடங்கியது. அப்போது தொடங்கிய அசுர வளர்ச்சி இடையில் சில காலம் தடைபட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அதுவும் மருத்துவ படிப்புகளுக்கான வளர்ச்சி கிடுகிடுவென வளர்ந்தது.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மருத்துவக்கல்வி மிதமான வளர்ச்சி பெற்றாலும், இதர படிப்புகள் மிகப்பெரிய அளவில் வளர்ந்தன. ஜெ., ஆட்சிக்காலத்தில் மருத்துவக் கல்வியும், கலைக்கல்வியும் அசுர வேகம் பிடித்தன. அடிப்படை கல்வி, மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, கலைக்கல்லுாரிகளில் காமராஜர் எட்டிய இலக்கினை அடுத்து வந்த முதல்வர்கள் எட்ட முடியாவிட்டாலும், தங்களால் இயன்ற அளவு செய்தனர் என்பதை மறுக்கவே முடியாது.

பொதுவாகவே தமிழகத்தில் காமராஜர் ஏற்றிய கல்வி தீபத்தை அடுத்தடுத்த வந்த அரசுகள் அணையாமல் பார்த்துக் கொண்டன என்பது மறுக்கவே முடியாத உண்மை. தொழில்துறையும் அதேபோல் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. இப்படி சீராக முன்னேறிய கல்வி வளர்ச்சி இன்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் மருத்துவ படிப்புகள் சக்கை போடு போடுகின்றன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களைப் பொருத்தவரை கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டிலுள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 33 மாநிலங்களில் 655 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

மொத்தம் 1,00,163 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 11,275 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. முதுநிலை மருத்துவக் கல்லுாரியில் கர்நாடகத்திற்கு அடுத்து தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.எண்ணிக்கையில் மட்டுமல்ல... படிப்பின் தரத்திலும் தமிழகம் முதலிடம் என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

Tags

Next Story