எல்லாமே காசு... பணம்...துட்டு தான்.. மணல் கடத்தலை தடுத்த பின்னணி
பைல் படம்
ஸ்ரீவில்லிப்புத்தூரில் 100க்கு அதிகமான செங்கல் சூளைகள் உள்ளன. செங்கல் தயாரிப்பதற்கான மூலப்பொருளான வளமான செம்மண் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டி கிடக்கிறது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு கனிம வளத்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதில், விவசாயிகள் விவசாய மேம்பாட்டிற்காக தங்களது பட்டா நிலத்தில் குறிப்பிட்ட அளவு மண்ணை அள்ளிஅப்புறப்படுத்திக் கொள்ளலாம். மேலும் மண்பானை தொழில் மற்றும் செங்கல் சூளை தொழிலுக்கு விவசாயிகள் கண்மாய்களில் வண்டல் மண் மற்றும் களி மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இதையடுத்து ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் இந்த கனிம வளத்துறையின் உத்தரவை பயன்படுத்தி பினாமிகள் பெயரில் மணல் வியாபாரத்தில் இறங்கினார்.
பிறகு தனது பினாமிகள் மூலம் கனிம வளத்துறை அதிகாரிகள் உடந்தையுடன் கடந்த ஏப்ரல் மாதம் திருவண்ணாமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சிங்கம்மாள்புரம், பந்தப்பாறை ஆகிய இடங்களில் விதிமுறைகளை மீறி ஒரு நாளைக்கு 100 லாரிகள் வீதம் செம்மண்ணை அள்ளி அதை காசாக்கினார். இந்த விவகாரம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செம்மண் கடத்தலை சமீபத்தில் நிறுத்திய தி.மு.க., விஐபி ஒருவரும் மற்றும் அவரது பினாமிகள் பார்வை ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெரிய குளம் கண்மாய் மீது திரும்பியது.
விவசாயிகள் பெயரில் அவரது பினாமிகள் பெரியகுளம் கண்மாயில் உள்ள வண்டல் மண், களி மண்ணை விதிமுறைகளை மீறி டிராக்டரில் அள்ளி சென்று காசாக்கினர். இதை அறிந்த அ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மே 5ம் தேதி தனது ஆதரவாளர்கள், மீடியா, வீடியோ கேமிராமேன்களுடன் பெரியகுளம் கண்மாய்க்கு சென்றார். அங்கு விதிமுறைகளை மீறி மண் அள்ளக்கூடாது என்று தகராறில் ஈடுப்பட்டார்.
உடனே நகராட்சி தலைவர் மணல்’கண்மாய்க்குள் ஏன் வந்தே? வெளியே போ’’ என்று கூறி மல்லுக்கட்டினர். ’இல்லையென்றால் டிராக்டரை உன் மேல் ஏற்றுவோம்’ என்று மிரட்டல் விடுத்தனர். உடனே இன்பத்தமிழன் டிராக்டரை மறித்தார். இதில் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு இன்பத்தமிழனுக்கு ஒரு போன் பறந்தது. உடனே அங்கிருந்து அவர் வெளியேறினார்.
பெரியகுளம் கண்மாயில் நடந்த மணல் கடத்தல் மற்றும் மோதல் விவகாரத்தை செல்போன் மற்றும் வீடியோ கேமிராவில் பதிவு செய்த இன்பதமிழனின் ஆதரவாளர்கள் பிறகு மீடியாவில் கசியவிட்டனர். இது பற்றி ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசியல் கட்சியினரிடம் பேசினோம். ’’திருவண்ணாமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆளும் கட்சியினரின் பினாமிகள் செம்மண் அள்ளிய போது இன்பத்தமிழனின் தம்பியும், தி.மு.க-வை சேர்ந்த தங்கமாங்கனி தனது ஆதரவாளர்களுடன் போய் டிராக்டரை மறித்தார். பிறகு திமுகவினர் சிலர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.
இதை தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியகுளம் கண்மாயில் மணல் அள்ளுவதை அறிந்த இன்பத்தமிழன் திட்டமிட்டு வீடியோ கேமிராமேன்களுடன் சென்று ரகளை செய்தார். பிறகு என்ன நடந்ததோ கப்சிப் ஆகிவிட்டார். டிராக்டரை ஏற்றி விடுவோம் என்று மிரட்டியது தொடர்பாக கூட இன்பத்தமிழன் போலீசில் புகார் செய்யவில்லை. எல்லாம் அரசியல் மற்றும் பணம்தான் காரணம். அன்றைக்கு தம்பி தங்கமாங்கனியிடம் மல்லுக்கட்டிய இதே ஸ்ரீவில்லிப்புத்தூர் வி.ஐ.பி.,யின் பினாமிகள்தான் இன்றைக்கு அண்ணன் இன்பத்தமிழனுடன் மோதுகிறார்கள். மணல் கடத்தல் விவகாரங்களை தட்டி கேட்பதன் பின்னணி எல்லாம் அரசியல் மற்றும் காசு, துட்டு, பணம் , மணி மேட்டர்தான்’’ என்று கமெண்ட் அடித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu