அதிமுக - பாஜ உறவு இப்போது எந்த லெவலில் உள்ளது?
பைல்படம்
அதிமுக-பாஜக இடையேயான மோதல் போக்கு தற்சமயம் குறைந்திருந்தாலும் இரு தரப்பிலு மே பிரச்னைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
அந்தவகையில், சில சலசலப்புகள் இன்னமும் ஆங்காங்கே கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இதற்கான காரணங்கள் என்ன? அதிருப்தியாளர்கள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு தாவிய நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியே கேள்விக்குறியானது.. இரு தரப்பு நிர்வாகிகளுமே சரமாரியாக விமர்சித்தும் கொண்டார்கள். இதற்கு பிறகு, சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணி என்று இரு கட்சி தரப்பிலுமே பேட்டிகள் மாறி மாறி தரப்பட்டன.
ஆனாலும், மறுநாளே, வள்ளுவர் கோட்டத்தில், திமுகவை எதிர்த்து நடத்திய பாஜக கூட்டத்தில், அதிமுகவில் யாருமே நேரில் வரவுமில்லை. ஆதரவும் தரவில்லை. மாறாக, கூட்டணி தொடரும் என்று அறிவித்த பிறகும் கூட, வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர்கள் சரமாரியாக விமர்சிப்பதை காண முடிந்தது. அப்படியா னால் உண்மையிலேயே இந்த இரு கட்சிகளுக்குள்ளும் உள்ள மோதல் போக்கு என்ன? இன்னமும் அதிருப்திகள் விலகாமல் இருக்க என்ன காரணம்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் தான் 2 கட்சிகளுக்கும் இடையே இப்போது நடந்து கொண்டிருக்கும் மோதலுக் குக் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி தரப்பு தங்களை நடத்திய விதமும், கிட்ட சேர்க்காமல் பிரச்சாரம் செய்ததும், தமிழக பாஜகவை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கி விட்டதாம். ஆனால், தமிழக பாஜக தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று திரியை கொளுத்தி, கமலாலயம் மீது வீசுகிறது எடப்படி தரப்பு. அதுவும் தங்கள் தரப்புக்கு தமிழக பாஜக ஆதரவு தராமல் வேண்டுமென்றே வாரக்கணக்கில் இழுத்தடித்ததை எடப்பாடி டீம் விரும்பவில்லையாம்.
அதனால்தான், கடுப்பான எடப்பாடி, பாஜக நமக்கு ஆதரவு தராவிட்டால் பரவாயில்லை. நாம களத்தில் வேலையை பார்ப்போம் என்று ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டாராம். அதுமட்டுமல்ல, இரட்டை இலை யாருக்கு என்று தெரியாமல் இருந்த நிலையில் ஓபிஎஸ் + எடப்பாடி என இரு தரப்பையுமே சந்தித்து பேசியிருந்தார் அண்ணாமலை. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதுமே "ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது என்று அதிரடியாக பேட்டி தந்தது, எடப்பாடி டீமுக்கு மேலும் கொதிப்பை தந்து விட்டதாம்.
அதனால்தான், தங்களை தேடி வந்த பாஜக அதிருப்தியாளர்களை மனமுவந்து அதிமுக ஏற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள். இதை பார்த்து எரிச்சலடைந்த அண்ணாமலை, அன்றைய தினமே சூட்டோடு சூட்டாக ஓபிஎஸ்ஸை தேனியில் தேடிப்போய் சந்தித்த காரணமும் இதனால் தானாம். ஓபிஎஸ்ஸூக்கு ஆறுதல் சொன்னதோடு நிற்காமல், "ஓபிஎஸ் மீண்டும் வருவார் - மீண்டு வருவார்" என்று பஞ்ச் பேசி, மேலும் டென்ஷனை ஏற்றவும், எடப்பாடி டீம் தகிக்க துவங்கி விட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயலலிதாவை விட என்னுடைய தாயார் 100 மடங்கும், எனது மனைவி 1000 மடங்கும் பவர்புல் லேடி என்று அண்ணாமலை சொல்லவும், கோபத்தின் உச்சிக்கே போய்விட்டதாம் எடப்பாடி டீம். இதற்கு பிறகே, போஸ்டர் கிழிப்பு, உருவ படம் எரிப்பு என இரு தரப்பிலுமே பதிலடிகள் ஆரம்பமாகி விட்டன. இந்த சமயத்தில் சமாதான நடவடிக்கை மேற்கொண்டபோதிலும் கூட, அதிருப்திகளும், கோபங்களும், கொந்தளிப்புகளும் நீங்காமல் அப்படியே படிந்து விட்டதாக தெரிகிறது. எனவே, அதிமுக தலைவர்களே சமாதானம் ஆனாலும் தொண்டர்களை சமாதானம் செய்வது கஷ்டம் என்கிறார்கள்.
ஜெயலலிதாவையே சீண்டி விட்டதால், தொண்டர்கள் தேர்தல் சமயத்தில் இறங்கி வேலைபார்ப்பார்களா? கூட்டணி உறவை அண்ணாமலையின் பேச்சு நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள். எம்பி தேர்தல் என்ற ஒரு விஷயத்துக்காக மட்டுமே அதிமுகவை தமிழக பாஜக பொறுத்து கொண்டு சென்றாலும், இந்த விரிசலும், உரசலும் மேலும் அதிகமானால், நிச்சயம் அதிமுகவுக்கு நிகரான பி பிளான் ஒன்றையும் பாஜக, கையில் எடுக்கவும் தயங்காது என்கிறார்கள்.
உச்சஸ்தானம் அதுமட்டுமல்ல, அண்ணாமலை அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, சில முடிவுகள் சிலபேருக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அம்மா எடுக்காத முடிவுகளா? கலைஞர் ஐயா எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அது போன்றுதான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்தத் தலைவர்களைப் போல கட்சியின் நன்மைக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கூட பயமில்லாமல் எடுப்பேன் என்று சொல்லியிருந்தார். ஆக, தன்னை கருணாநிதி, ஜெயலலிதா அளவுக்கு தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக அண்ணாமலை கருதுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, பாஜகவில் உள்ள சீனியர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்கிறார்கள்.
அண்ணாமலை, கட்சியில் இருந்து தங்களை தொடர்ந்து ஒதுக்கி வைக்கிறாரே என்ற ஆதங்கமும், தன்னிச்சையான செயல்பாடுகளும் தான், பாஜகவின் உட்பூசலுக்கு காரணமாகி உள்ளதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள்.. இப்படி பல தரப்பட்ட, இடியாப்ப சிக்கல்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரு கட்சி தலைவர்களும், இந்த தர்மசங்கட நிலைமையை இயல்புக்கு எப்படி கொண்டு வரப்போகிறார்கள்? அதிமுக - பாஜக தொண்டர்கள் எப்படி சமாதானம் ஆக போகிறார்கள்? என்பதெல்லாம் இனிமேல் தெரியவரும்.
என்னதான் டெல்லியில் ஆட்சி செய்தலும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் அணுசரித்து செல்ல வேண்டிய நிலை தான் கட்சி இருக்கிறது .அங்கு ரெண்டு ஐ.பி.எஸ்., அனுப்பியும் கட்சி நிலைமை சரியில்லை. ரெய்டு விட்டு மிரட்ட பார்த்தால் ஒரு தடவை தான் பயப்படுவான். அப்புறம் தைரியம் வந்திடும் அதனால் மிரட்டித்தான் காரியம் சாதிக்கணும் என்ற நிலையில் பா.ஜ.க உள்ளது.
நோட்டாவை தாண்டாத பிஜேபி அக்கட்சி டெபாசிட் வாங்க கூட நம்ம தயவு தேவை.அதுதான் நம்ம பிளஸ் பாயிண்ட் . எனவே பிஜேபி ஒரு லெவெலுக்கு மேல் நம் ஆதரவின்றி செயல்பட முடியாது! நம் வழிக்கு வந்து தான் ஆக வேண்டும் என அ.தி.மு.க. நினைக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu