தேனி பேச்சுவார்த்தை தோல்வி: சென்னை சென்ற திமுக நிர்வாகிகள்
தேனி தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன்.
தேனி நகராட்சி தலைவர் பதவி தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன் அதிரடியாக தனது மனைவியை நிற்க வைத்து நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களை கைப்பற்றிய தி.மு.க.,வினர் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பலமுறை அறிவுறுத்தியும், எச்சரிக்கையும் செய்து பார்த்தார். முதல்வர் உத்தரவை செயல்படுத்த தேனி மாவட்ட காங்- தி.மு.க., நிர்வாகிகள் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
ஆனால் தேனி நகர தி.மு.க., செயலாளர் பாலமுருகன் கடைசி வரை தனது மனைவி ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அவருக்கு தி.மு.க., கட்சியிலும் அவர் சார்ந்த நாயுடு சமூகத்திலும் பலத்த ஆதரவு உருவாகி உள்ளது. தவிர காங்., கட்சியிலேயே சிலர் பாலமுருகனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பேச்சு வார்த்தை முற்றிலும் தோல்வியடைந்த நிலையில், வேறு வழியின்றி தேனி மாவட்ட தி.மு.க., மற்றும் காங்., கட்சி நிர்வாகிகள் சென்னை புறப்பட்டு சென்று விட்டனர். பதவியை பறி கொடுத்த காங்., வேட்பாளர் சற்குணத்தின் மகன் டாக்டர் தியாகராஜனும் சென்னை சென்றுள்ளார்.
பிரச்னைக்கு முக்கிய காரணமான தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன் சென்னை செல்லவில்லை. நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் இருக்கும் இடமும் ரகசியமாகவே இருந்து வருகிறது. தற்போது முடிவு தி.மு.க., மேலிடத்தின் கைகளுக்கு சென்று விட்டதால், தலைமை என்ன செய்யப்போகிறது என ஒட்டுமொத்த தேனி மாவட்டமும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இதற்கிடையில், பாலமுருகன் தி.மு.க., கட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளார். கட்சி வளர்ச்சிக்காக இதுவரை தேனியில் யாரும் செலவு செய்யாத அளவுக்கு பல கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். தேனியில் அ.தி.மு.க.,வை முழுமையாக வீழ்த்தி தி.மு.க.,வை தலைநிமிர செய்துள்ளார். தேனி வரலாற்றி்ல முதன் முறையாக நகராட்சி தலைவர் பதவி தி.மு.க.,விற்கு கிடைத்துள்ளது. எனவே கட்சித்தலைமை மிகவும் ஆழமாக யோசித்த பின்பே முடிவுக்கு வர வேண்டும் என தி.மு.க.வினர் பலர் தலைமைக்கு மனு அனுப்பி வருகின்றனர்.
இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருப்பதால், தற்போதைக்கு பாலமுருகன் நகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவரும், அவரது மனைவியும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கப்படலாம். ஆனால் சில மாதங்களில் மீண்டும் சூழ்நிலை மாற வாய்ப்புகள் உள்ளது என தி.மு.க., உயர் மட்ட நிர்வாகிகள் உறுதியுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu