டெல்லியில் அண்ணாமலை..! பா.ஜ.க. மவுனம் கலையுமா ?

டெல்லியில் அண்ணாமலை..!  பா.ஜ.க. மவுனம் கலையுமா ?
X

பாஜக தலைவர் அண்ணாமலை (பைல் படம்)

பாஜக - அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட ஆலோசனையை டெல்லி கையில் எடுத்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கு பாஜக எந்த கருத்தையும் சொல்லவில்லை. ரியாக்ட் செய்யவுமில்லை.. ஆனால், கடுமையான அப்செட் ஆகியிருப்பதாக தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் இப்படியொரு முடிவு எடுத்திருப்பது கலக்கத்தையும் குழப்பத்தையும் தந்து வருகிறது.. இது பாஜகவுக்கான சறுக்கலையும் பெற்று தந்துவிடும்.

தனித்து களம் காண வேண்டும் என்பது தமிழக பாஜக தலைவரின் தனிப்பட்ட எண்ணமாக இருந்தாலும்கூட, அதிமுகவுடனான இந்த கூட்டணி முறிவை டெல்லி மேலிட தலைவர்களும் விரும்பவில்லை. தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் விரும்பவில்லை. இது தமிழக பாஜகவின் வளர்ச்சியை முறித்துவிடும் என்ற கிலியும் கட்சிக்குள் எழுப்பி விட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், அண்ணாமலை இதுகுறித்து எதுவுமே பேசவில்லை.. அவரது மவுனம் பலவித சந்தேகங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், டெல்லி தலைமை அண்ணாமலையை தொடர்பு கொண்டு பேசியதாகவும், உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று கோவையில் இருந்து நேற்று இரவு அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார். பாஜக தலைவர்களையும் சந்தித்து பேச போகிறார்.

என்ன நடந்தது என்ற விவரங்கள் மேலிடத்துக்கு நன்கு தெரியும் என்றாலும், கூட்டணியை முறித்துக் கொண்டு செல்லும் அளவுக்கு பிரச்சனையை வளரவிட்டது தொடர்பாக அண்ணாமலையிடம், வேறு சில விவரங்களையும் கேட்க உள்ளதாக தெரிகிறது..

வடமாநிலங்களில் கடந்த 2 வருடங்களில் நடந்த சில தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியது.. காங்கிரசும், ஆம் ஆத்மியும் பாஜகவை முந்திக்கொண்டு வந்து கொண்டிருக் கின்றன. இதனால், தன்னுடைய கோட்டை என்று கருதக்கூடிய மாநிலங்களையே, பாஜக ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. எனவே, வடமாநிலங்களில் விட்டதை, தென்மாநிலங்களில் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் தான், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே எம்பி தேர்தல் வியூகங்களில் தமிழகத்தில் களமிறங்கியது. சில தொகுதிகளையும் டார்கெட் செய்து, களப்பணியில் இறங்கி வரும்நிலையில், கூட்டணி முறிவு என்ற விஷயத்தை மேலிட தலைவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லையாம்.

ஒருவேளை, நிலைமை இவ்வளவுக்கு வரும்வரை வளர விடாமல், அதிமுகவை முன்கூட்டியே சமாதானப்படுத்தி இருக்கலாமோ? என்ற எண்ணமும் தலைவர்களிடம் தோன்றியுள்ளதாம். எனினும், தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளார்களாம். தனித்து போட்டியிட்டால் தான் பாஜகவின் பலம் முழுமையாக தெரியும் என்பதே அண்ணாமலையின் எண்ணமாக உள்ளதாகவும், தன்னுடைய தலைமையிலேயே தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும் என்பதிலும் திடமாக உள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனினும் டெல்லி செல்லும் அண்ணாமலை, கூட்டணியில்லாமல் போட்டியிட்டால், எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் தலைவர்களிடம் நாளை ஆலோசனை நடத்த போவதாக தெரிகிறது.

திமுகவைவிட அதிக வாக்கு வங்கியை வைத்திருப்பது அதிமுகவாகும். ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு முயன்று கொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலையால் கூட்டணி முறிந்து விழுந்துள்ளது, பாஜக தலைவர்களுக்கு சங்கடத்தை தந்துள்ளது. இருப்பினும் அண்ணாமலை யின் அதிரடிகள் காரணமாகவே, தமிழகத்தில் பாஜக எழுச்சி பெற்றிருப்பதாக டெல்லி அதிகம் நம்புகிறது.

அதனால்தான், கடந்த ஒரு வருட காலகமாகவே, மாநில தலைமையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியபோதும்சரி, தங்களுக்கு போதுமான முக்கியத்துவத்தை அண்ணாமலை தருவதில்லை என்று தமிழக பாஜக மூத்த தலைவர்கள் புலம்பிய போதும் சரி, டெல்லி தலைவர்கள் அசரவில்லை. அண்ணாமலை மீதான நம்பிக்கையையும் குறைத்து கொள்ளவில்லை. எந்த சூழ்நிலையிலும் அவரை விட்டுக் கொடுப்பதற்கும் தயாராக இல்லை என்றே தெரிகிறது.

என்னாகும்: அதேசமயம், தமிகத்தில் தனித்து போட்டியிடுவது என்பது தற்கொலைக்கு சமமானது என்பதை மேலிட தலைவர்கள் உணர்ந்திருப்பதால், எடப்பாடியை சமாதானப் படுத்தவே முழுமூச்சாக இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

Next Story
திருச்செங்கோடு: நிறைவடைந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!