ரூல்கர்வ் முறையினை எதிர்த்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்

ரூல்கர்வ் முறையினை எதிர்த்து  விவசாயிகள் முற்றுகை போராட்டம்
X

ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை அமல்படுத்தப்பட்டதை கண்டித்து கம்பம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை அணையில் 136.30 அடி தண்ணீர் மட்டுமே தேக்க முடியும். ஜூலை 20 முதல் 31ம் தேதி வரை 136.60 அடி வரை தான் தண்ணீர் தேக்க முடியும். இப்படி நீர் மட்டத்தை படிப்படியாக அதிகரித்து செப்டம்பர் மாதம் 10ம் தேதிக்கு பிறகு தான் 142 அடி தண்ணீர் தேக்க முடியும்.

இடையில் பெய்யும் மழை நீரை பெரியாறு அணையினை திறந்து இடுக்கி அணைக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த ரூல்கர்வ் முறையினை அமல்படுத்துவதை கண்காணிக்க முல்லைப்பெரியாறு அணை துணை கண்காணிப்பு கமிட்டி வேறு நாளை அணைக்கு வருகிறது.

இந்த கமிட்டியின் வருகையினை எதிர்த்தும், ரூல்கர்வ் முறையினை அமல்படுத்துவதை கண்டித்தும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தலைமையில் கம்பம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளுடன் இவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து நாளை முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் துணை கண்காணிப்புக்குழுவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுபற்றி அன்வர்பாலசிங்கம் தலைமையிலான போராட்டக்குழுவினர் கூறியதாவது:-

பெரியாறு அணையில் ரூல்கர்வ் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மிகப்பெரிய வறட்சியை எதிர்கொள்ள உள்ளன. பெரியாறு அணை துணைக்கண்காணிப்புக்குழு அணையின் உண்மை நிலை, ரூல்கர்வ் அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு, விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து நீர் வளக்கமிட்டிக்கு அறிவுறுத்தப்போவதில்லை. பின்னர் ஏன் இவர்கள் இங்கு சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

பெரியாறு அணை தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்காக கட்டப்பட்டுள்ள அணை என்பதை மறந்து விடக்கூடாது. இது ஏதோ கேரளாவிற்கு கட்டப்பட்டதை போல் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். பெரியாறு அணையில் ரூல்கர்வ் அமல்படுத்தி கூடுதல் நீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று, அங்கு தினமும் 784 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கைககள் எடுத்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையினை கண்காணிக்க டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உட்பட 120 கேரள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கு சென்று தங்குவதே இல்லை. இவர்கள் மதுரையிலும் கம்பத்திலும் தங்கி பணிபுரிகின்றனர். இதுவே கேரளாவிற்கு புதிய நம்பிக்கையினை தருகிறது. மெல்ல, மெல்ல பெரியாறு அணையினை நாம் இழந்து வருகிறோம். இதனை கேரளாவிற்கு வி்ட்டுத்தர முடியாது. முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கும், அணை அமைந்துள்ள 8964 ஏக்கர் நிலம் 999 ஆண்டுகளுக்கு தமிழர்களுக்கு சொந்தம் என்பதை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்