அதிமுக தொண்டர்களே உஷார்...ஈரோடு சொல்வது என்ன ?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் எதிர்பார்த்ததுதான் நடந்துள்ளது. ஆனால் நாம் எதிர்பார்க்காத நிகழ்வுகள் இங்கு பல உண்டு. அவற்றைப் பார்ப்போம்.
1. முதலில் மாற வேண்டியது எடப்பாடி பழனிசாமி தான். எதிர்க்கட்சிகளை ஒன்றாக அரவணைத்து திமுகவை வீழ்த்துவதற்கு திட்டம் தீட்டுவார் என்று எதிர்பார்த்தால், அவர் ஓபிஎஸ்- ஐ எப்படி கவிழ்ப்பது, தன்னை எப்படி கட்சியில் நிலை நிறுத்திக் கொள்வது என்பதில் தான் அவரது கவனம் சென்றது. அதனால் தான் இரட்டை இலை கிடைத்தும் இந்த அவமானமான தோல்வியை அதிமுக பெற்றுள்ளது.
2. இரண்டாவது எப்போதுமே பரபரப்பு அரசியல் நடத்தும் அண்ணாமலை. பொதுமக்கள் பிரச்னை எதுவோ அதை தட்டித்துாக்காமல் போராட்டம் நடத்துவதால் எந்த பலனும் இருக்காது என்பதையும் அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. அடுத்து சீமான் இத்தனை போட்டியாளர்களுக்கு மத்தியிலும் இவர் வாங்கி உள்ள ஓட்டு பாராட்டுக்குரியது உண்மையிலேயே ஒரு பைசா கூட செலவழிக்காமல் இவர் இவ்வளவோ ஓட்டு வாங்கி இருக்கிறார் என்றால் அவருக்கு தமிழகத்தில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
4. அடுத்து விஜயகாந்த்: நல்ல மனிதர். தவறான வழிகாட்டுதல்களில் சிக்கிய நிலையில், உடல் நலனும் ஒத்துழைக்காததால் மனிதாபிமானம் மிக்க இந்த நல்லவரும் வீழ்ந்து விட்டார்.
5. அடுத்து ஈரோட்டில் பணம் விளையாடியது. பரிசுப் பொருட்கள் அள்ளி வீசப்பட்டன. தினந்தோறும் பிரியாணி சரக்கு என ஓப்பனாக விநியோகம் செய்யப்பட்டன. எல்லாத்தையுமே தேர்தல் கமிஷன் வேடிக்கைதான் பார்த்தது. ஒன்றும் செய்ய முடியவில்லை. இங்கு நடந்த முறைகளை சரியான நேரத்தில் ஆதாரங்களுடன் தொகுத்து டெல்லியில் போய் தேர்தல் கமிஷனரை பார்த்து கொடுத்து தேர்தலை நிறுத்தி இருக்க வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும். ஆனால் எடப்பாடியும் அண்ணாமலையும் அதனை செய்யாமலேயே காலத்தை கடத்தி விட்டார்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்திய அரசு ஏன் இவ்வளவு கூத்துகளையும் வேடிக்கை பார்த்தது. ஒரு சாதாரண தமிழக மந்திரி உதயநிதி எப்படி பிரதமரை சென்று பார்க்க முடிகிறது. இதற்கு என்ன பின்னணி? தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். அவர் தாயார் இறந்ததை கூட அதிமுகவினர் யாரும் சென்று துக்கம் விசாரிக்கவில்லை என்னும்போது அவர்கள் மீது எப்படி பொது மக்களுக்கு நம்பிக்கை வரும்.
ஏற்கெனவே சசிகலா தயவில் முதல்வராகி அவருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி என பெண்கள் மத்தியில் நன்றாக பதிந்து விட்டது. அதுவும் அவர் காலில் விழும் அந்த காட்சி, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் சோசியல் மீடியாக்களில் ஓடுமோ தெரியவில்லை. ஆனால் எதுவுமே நடக்காது போல எடப்பாடி மீசை பத்தி பேசுவதும் ரொம்பவும் கேலிக்கூத்தாகிவிட்டது. இரட்டை இலை ஒன்று மட்டும் தான் பிரச்னை என்பது போல, சின்னம் கிடைத்ததும் வெற்றியடைந்தது போல ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
என்ன ஆனது? ஆகவே நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும் இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் எடப்பாடிக்கு தொடர் தோல்விதான். இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் திமுகவை எதிர்த்து பாரதிய ஜனதா, அதிமுக, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் இதர ஜாதிகட்சிகள், அதன் இயக்கங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி முழுமூச்சாக களத்தில் இறங்கி போராடினால் மட்டுமே அதிமுகவுக்கு இனி விடிவு காலம் உண்டு. இல்லை என்றால் இந்த தோல்வி ஒரு தொடர்கதையின் ஆரம்பாகத்தான் இருக்கும். எனவே அதிமுக தொண்டர்கள் உஷாராக வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu