எடப்பாடி - வேலுமணி விரிசல் உண்மையா?

எடப்பாடி - வேலுமணி  விரிசல் உண்மையா?
X

பைல் படம்

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இதையொட்டி பல்வேறு தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இதையொட்டி பல்வேறு தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக, கூட்டணி முறிவில் அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணிக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், வேலுமணி தன் சமூக வலைதளப் பக்கத்தில், “என்றென்றும் அதிமுக-காரன்” என்று பழைய புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

இதன் பின்னணித் தகவல்கள் குறித்து அதிமுக-வினர் சிலரிடம் பேசினோம். “சமீபகாலமாக எடப்பாடியார், வேலுமணி இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மகன் திருமணத்தை அக்டோபர் மாதம் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதற்காக வேலுமணி, அவரின் சகோதரர்கள் அன்பரசன், செந்தில் ஆகியோர் மாநிலம் முழுவதும் பயணித்து கட்சிக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தனிப்பட்ட அழைப்பு மூலம் வேலுமணி தனக்கான ஆதரவைத் திரட்டுகிறார் எனப் புகார் கிளம்பியது. இதை எடப்பாடி விரும்பவில்லை. ஒரு பக்கம் பாஜக கூட்டணி வேண்டாம் என்று பேசினாலும், வழக்கு உள்ளிட்ட காரணங்களால் அவசரப்பட வேண்டாம் என நினைத்தாராம் வேலுமணி. `கூட்டணி முறிவு’ என்று உடனடியாக எடுத்த முடிவிலும் அவருக்கு உடன்பாடு இல்லை.

அவர் ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். மகாராஷ்டிரா ஏக்நாத் ஷிண்டேபோல,வேலுமணி மூலம் அதிமுக-வை உடைக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. இதையறிந்து எடப்பாடியார் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் வேலுமணியை சமாதானப்படுத்த முயன்று வருகிறார்” என்றனர்.

இது குறித்து வேலுமணியின் ஆதரவாளர்கள் கூறுகையில், “வேலுமணிக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பது உண்மை தான். அதை வைத்துத்தான் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். உண்மையில் எடப்பாடியார், வேலுமணி இருவரும் நல்ல நட்பில் இருக்கிறார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக நடந்த அதிமுக மாநாடு, கூட்டணி முறிவு உள்ளிட்ட விவகாரங்களில் வேலுமணியின் பங்கு என்ன என்பது சீனியர்களுக்கு நன்கு தெரியும்.

சமீபத்தில் அதிமுக நிர்வாகிகள் நியமனத்தில், பல நிர்வாகிகள் வேலுமணி பரிந்துரை செய்தவர்கள் தான். இது எடப்பாடியாருக்கும் நன்கு தெரியும். இவரைப்போல களப் பணியாளர்கள் இல்லை என்பதால், வேலுமணியை அவர் உறுதியாக நம்புகிறார். அவரும் அதிமுக-வுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு” என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!