ஆதிவாசிகள் தமிழர்களை வீழ்த்தி உருவான கடவுள் தேசம்
பைல் படம்
மதம் என்றால் அபின் (கஞ்சா) என்று மதத்திற்கு மரண வரையறை கொடுத்த மார்க்சின் சீடர்களே இந்த "GODS OWN COUNTRY "என்ற பதத்தை முன்மொழிந்து வழிமொழிந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
கேரளாவில் பிரபலமாக அறியப்பட்ட மக்களின் மதிப்பு பெற்ற தலைவர்களில் ஒருவரான ஈ.கே.நாயனார் அம்மாநிலத்தை ஆளும் போது தான், இந்த வார்த்தை அங்கே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அதைவிட ஆச்சரியம் இதை நேரடியாக முன்மொழிந்தவர் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் முக்கியமானவரான..சுற்றுலாதுறை அமைச்சராக இருந்த பி. எஸ். ஸ்ரீனிவாசன் .
மதத்தை மறுக்கின்ற மார்க்சிஸ்ட்கள், தங்கள் ஆளும் மாநிலத்தையே கடவுளின் தேசம் என்று பெயர் சூட்டத் துணிந்தது தான் நம்பமுடியாத ஆச்சரியம். பொதுவாக கேரளாவினுடைய பெயர் *THE LAND OF COCONUT*. அதாவது தேங்காய்களின் தேசம்..1989 வரை அது தேங்காய்களின் தேசம் தான். அது கேரள GAZETTE லேயே உள்ளது. பிறகெப்படி அது கடவுளின் தேசமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
1980களில் தேசிய விளம்பர நிறுவனமான முத்ரா தகவல் தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர் வால்டர் மெண்டிஸ் என்பவரால் "கடவுளின் சொந்த நாடு" என்ற பட்டம் கேரளாவுக்கு வழங்கப்பட்டது. கேரளாவை சுற்றுலாத் தலமாக விளம்பரம் செய்வதற்காக இந்த நிறுவனத்தைக் கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் நியமித்தது. அவர்கள் இந்தச் சொற்றொடரை உருவாக்கினர்.
கடவுளின் தேசம் என்கிற இந்த வார்த்தையை முதலில் பயன்படுத்திய நாடு நியூசிலாந்து தான்.பின்னர் அதை ஆஸ்திரேலியாயும் சில ஐரோப்பிய நாடுகளும்கூட சொந்தம் கொண்டாடின. அந்த நேரத்தில்தான் ரோஜாவின் ராஜாவான நேரு மாமாவிற்கு மிகவும் பிடித்த காஷ்மீர், சுற்றுலா பயணிகளை கவர தனக்கு தானே ஒரு பெயரைச்சூட்டிக்கொண்டது.அதாவது *HEAVEN OF EARTH*. அதாவது பூலோக சொர்க்கம்.அதைப்பார்த்த கேரளாவும் தனக்கு ஒரு அழகான பெயர் சூட்டி சுற்றுலாவாசிகளை கவர ஒரு திட்டம் தீட்டியது. அந்த திட்டத்தின் விளைவாக கிடைத்த பெயரே "GODS OWN COUNTRY "
வால்டர் மென்டிஸ் என்கிற ஒரு சுற்றுலா வடிவமைப்பாளரே ஐரோப்பிய நாடுகளில் உலவிக்கொண்டிருந்த இந்த பெயரைக் களவாடி கேரளாவிற்கு சூட்டி விட்டார்.அன்றைய கேரள முதல்வர் நாயனாரும் அதை மறுக்காமல் தனது மாநிலத்திற்கு கடவுளின் தேசம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
அதாவது கடவுளின் தேசத்தை ஆள்வது ஒரு கடவுள் மறுப்பாளர். ஈ.வே.ரா தினசரி ஸ்ரீராமஜெயம் எழுதினால் எப்படி இருக்கும் அதுபோல தான் இதுவும் நடந்தது. அத்தனை மார்க்சிஸ்ட்கள் இந்தியா முழுவதும் இருந்தும் யாராவது வாய் திறக்கட்டுமே...ம்ஹீம்...மூச். இதுதான் இவர்களின் கொள்கை. சுற்றுலாவை வளர்ந்து இவர்கள் கேரளாவை கடவுளின் தேசமாக்க முயற்சி செய்தபோது அந்த பணமீட்டும் கொள்ளைக்கு மன்னிக்கவும் கொள்கைக்கு தடையாக நின்றது மூணாறு தமிழர்களும்...வயநாடு மாவட்ட ஆதிவாசிகளும்.
1989 ல் KTDC (kerala tourism development corporation) மால் உருவாக்கப்பட்டதும், அது செய்த முதல் வேலை மாநிலத்தில் வன வளம் மிக்க பகுதிகளை தேர்வு செய்து, அதை அழகுபடுத்தி விளம்பரப்படுத்துவது.அதன்மூலம் சர்வதேச சுற்றுலாவாசிகளை ஈர்த்து மில்லியன் கணக்கில் அந்நியச்செலாவணியை ஈட்டுவது என்பதாக இருந்தது. மூணாறு தமிழன் கேரளாவின் இந்த நிலம்பிடிக்கும் கொள்கைக்கு எதிராக எப்போதும் இருக்கவில்லை...
தேயிலைத் தோட்டஅடிமை வாழ்வில் இருந்து விடுபடுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகவே கருதினான்.அதனாலேயே தேவிகுளம் தாலுகாவில் ஐந்து வனவிலங்கு சரணாலயங்களை அமைத்து,மொத்த தமிழர்களையும் சூறையாட வழிசெய்த போதும் அவன் வாய் திறக்கவில்லை..
தலையில் இடிவிழுந்து சாவதுவரை தமிழன் எவனும் பேசப்போவதில்லை. தமிழரைப்போல வயநாடு மாவட்ட ஆதிவாசிகள் வாழாயிருக்கவில்லை.ஆதிவாசி கோத்ரா மகாசபையின் தலைவரான சி.கே. ஜானுவும்...தலித் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் கீதானந்தனும் கேரள அரசின் நிலம்பிடிக்கும் வேலைக்கு எதிராக முண்டாதட்டி களத்தில் நின்றார்கள்.
ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வரும்...சோனியாவின் கிச்சன் கேபினட் செல்லப்பிள்ளையுமான ஏ.கே. அந்தோணி யின் ஆட்சிக் காலத்தில் வயநாடு மாவட்டத்தையே சுற்றுலாவுக்காக கபளீகரம் செய்ய முனைந்தது அரசு. அரசுக்கு எதிராக ஆதிவாசி மக்களின் ஏக போக தலைவியான, ஜி.கே. ஜானு முண்டா தட்டியதும், வழக்கம்போல் காவல்துறை களத்தில் இறங்கியது.
ஜி கே ஜானு வை விட கீதானந்தனின் அறிவு இந்த இடத்தில் வெகுவாகவே பயன்பட்டது.அரசுக்கு வயநாடு மாவட்டத்தில் உள்ள எங்கள் நிலம் தேவை என்றால்,எங்களுக்கான குடிமனை பட்டாக்களை வழங்கு என்று களத்தில் இறங்கினார்கள். ஒருகட்டத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்திற்கு அருகாமையிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளை போட்டு குடியேறினார்கள் வயநாடு மாவட்ட ஆதிவாசி மக்கள்.
நிலைமை தீவிரம் ஆவதை உணர்ந்த சோனியாவின் செல்லப்பிள்ளை, வயநாடு மாவட்டத்தில் கேரள அரசின் சுற்றுலாத்துறையின் நிலம் எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராக நின்ற அப்பாவி ஆதிவாசிகள்மீது துப்பாக்கி சூடு நடத்தி, முத்தங்கா வனப்பகுதிக்குள் 6 பேரைக்கொன்று குவித்தது. அப்படி முத்தங்கா வனப்பகுதிக்குள் சுட்டும், அடித்தும், உதைத்தும், ஊனப்படுத்தியும் உருவானதுதான் இந்த "GODS OWN COUNTRY "
உழைக்கும் அப்பாவித்தமிழர்களின் வாழ்விடங்களை எல்லாம் வனவிலங்கு சரணாலயங்களாக மாற்றியும்... வயநாட்டு ஆதிவாசிகளை கொன்று குவித்தும், நிற்கதியாய் நின்ற அவர்களின் பிணங்களின் மீதுதான் உருவாகி இருக்கிறது இந்த கடவுளின் தேசம். உலகத்தில் எங்கேனும் ஒரு கடவுளின் தேசம் இப்படி உருவாக முடியுமா...?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu