தஞ்சை: ஆவணியாபுரத்தில் புதிய பாலம் அமைத்துத் தர அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை - மஞ்சள்மல்லி செல்லும் சாலையில், ஆவணியாபுரத்தில் உள்ள செட்டிகுளத்துக்கு செல்லும் வடிகால் வாய்க்கால் பாலம், பல ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள், பொது மக்கள் தினந்தோறும் சிரமப்பட்டு சென்று வந்தனர். இப்பகுதியில் புதியதாக பாலத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள், ஆவணியாபுரம் செட்டிகுளம் பாலத்தில் சிமெண்டினாலான குழாயை அமைக்க வந்தனர். இதனையறிந்த ஆவணியாபுரத்தை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆடுதுறை கிளை தலைவர் முஹம்மது அனஸ், கிளை செயலாளர் ஹிலால் அஹமத், கிளை பொருளாளர் ஜெஹபர் அலி, தஞ்சை வடக்கு மாவட்டபொருளாளர் மன்சூர் அலி, தஞ்சை வடக்கு மாவட்ட மருத்துவர் அணி வரிசை முஹம்மது மற்றும் பொதுமக்கள், சிமெண்ட் கட்டிடத்தை கட்டி தரவேண்டும், தரமற்ற குழாயினை பயன்படுத்தக்கூடாது, மழை காலத்தில் மீண்டும் பாலம் சேதமடையும் என குழாய் அமைக்கும் பணியினை மறித்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருநீலக்குடி போலீஸார், நிகழ்விடத்துக்கு சென்று நடத்திய பேச்சு வார்த்தையில், செட்டிகுளம் வாய்க்காலில் சிமெண்டிலான பாலம் கட்டித்தர வேண்டும் என முடிவு எடுக்கப்பட்ட நிலையில் குழாயினை அமைக்க வந்த திருவிடைமருதூர் நெடுஞ்சாலைதுறை ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள் திரும்பி சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu