விளைநிலங்களில் குழாய் பதிக்க எதிர்ப்பு : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் பதிக்கும் பணியை வயல்வெளிகளில் மேற்கொள்ளக்கூடாது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என IOC அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்து விவசாயிகளும்,பொதுமக்களும் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் நரிமணத்திலிருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டைக்கு எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு குழாய்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குழாய்களை விளைநிலங்களில் பதிக்க கூடாது, சாலைகளிலும், ஆற்றங்கரைகளிலும் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வெண்டயம்பட்டியில் ஐஓசி நிறுவனம் விளைநிலங்களில் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விளைநிலங்களின் வழியே குழாய்களை எடுத்துச் செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நிலத்திற்கு வழங்கக்கூடிய இழப்பீடு தொகையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பூதலூர் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu