மணல் அள்ளுவதை கண்டித்து ஆற்றில் இறங்கி போராட்டம்
கொள்ளிடம் ஆற்றில் இரவு, பகலாக மணல் அள்ளுவதை கண்டித்தும் உடனடியாக மணல் குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் திருச்சென்னம்பூண்டியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரியும் மேலும் தனியார் மணல் குவாரிகளிலும் இரவு, பகலாக மணல் அள்ளி வருவதாகவும் இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது, மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாகவும், எனவே மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கல்லணையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே அதிக அளவில் பள்ளம் தோண்டி மணல் எடுத்து வருவதால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான கல்லணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu