தொழிற்சங்க தலைவர் கே.டி.கே .தங்கமணி நினைவு நாள்: ஏஐடியுசி சார்பில் உறுதி ஏற்பு

தொழிற்சங்க தலைவர் கே.டி.கே .தங்கமணி நினைவு நாள்: ஏஐடியுசி சார்பில் உறுதி ஏற்பு
X

ஏஐடியூசி தொழிற்சங்க தலைவருமான கே.டி.கே.தங்கமணியின் 26 -ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் சங்க மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது

மதுரையில் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பள்ளி மேல் படிப்பை முடித்து லண்டனில் பார் அட் லா படித்தார்.

மக்களுக்கு சேவை செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாப்போம் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பாதுகாப்போம் என தொழிற்சங்க தலைவர் கே.டி.கே .தங்கமணி நினைவு நாளில் உறுதி ஏற்கப்பட்டது.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏஐடியூசி தொழிற்சங்க தலைவருமான கே.டி.கே.தங்கமணியின் 26 -ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் சங்க மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கே.டி.கே தங்கமணி மதுரையில் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பள்ளி மேல் படிப்பை முடித்து இலண்டனில் பார் அட் லா படித்தார். அங்கு படிக்கும் காலத்தில் பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் நாடு அடிமை பட்டிருந்தது கண்டு மனவேதனைு்பட்டார். இலண்டனில் தன்னுடன் படிக்கின்ற சக மாணவர்களை கொண்டு இந்திய நாட்டு விடுதலைக்கான அமைப்பை தொடங்கினார். அதற்கான இயக்கத்தையும் நடத்தினார்.

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி,அவரது கணவர் பெரோஷ்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பூபேஷ் குப்தா உள்ளிட்ட சக மாணவர்களுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார். இந்திய நாட்டு தலைவர்களிலேயே அவர் ஒருவர் தான். உலகின் மிகப்பெரிய தலைவர்களான ரஷ்ய அதிபர் ஸ்டாலின், செஞ் சீனத்தின் அதிபர் மாவோ, வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோசிமின் ஆகிய தலைவர்களை சந்தித்த இந்தியாவின் ஒரே தலைவர் கே.டி.கே தங்கமணி மட்டுமே ஆவார்.

படிப்பு முடித்து சொந்த ஊரான மதுரைக்கு வந்ததும் முதன் முதலாக மதுரை கோட்ஸ் மில் தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி வழக்காடினார். அதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், ஏஐடியூசி தொழிற்சங்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைக்காகவும், மக்களின் விடுதலைக் காகவும், தனது இறுதி நாள் வரை பாடுபட்டவர்.

பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக மக்கள் மன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமை,தமிழ் வழிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை வலியுறுத்தி பேசியவர். தனது சொத்துகள் அனைத்தையும் கட்சிக்காக எழுதி வைத்தவர். சென்னை பாலன் இல்லமான கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் ஒரு சிறிய அறையில் தனது இறுதி நாள் வரை வாழ்ந்து மறைந்தவர். அவரது மறைவு நாட்டிற்கும், மக்களுக்கும் பேரிழப்பாகும்.

நிகழ்வில், மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத்துறை நிறுவனங்களான வங்கி,போக்குவரத்து, மின்சாரம் ,நிலக்கரி, ரயில்வே உள்ளிட்ட மத்திய ,மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. அவர்களுக்கு ஆதரவாக போராடி பெற்ற தொழிற்சங்க சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலும் ஒப்பந்த முறையில் ஆள் எடுப்பது என்பது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான கொள்கைகளை முறியடிக்கவும், மக்களுக்கு சேவை செய்கின்ற பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்கவும் கே.டி.கே தங்கமணி நினைவு நாளில் உறுதி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஏ ஐ டி யூ சி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சி.சந்திரகுமார், கேடிகே. தங்கமணி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவரது வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்து உரையாற்றினார். கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் என்.சேகர், பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், பொருளாளர் சி.ராஜமன்னன், துணைத் தலைவர்கள் ஜி.சண்முகம், டி.சந்திரன் நிர்வாகிகள் பி.முருகவேல், டி.தங்கராஜ், கே.சுகுமார், நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!