போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழில் சங்கத்தினர்
போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட காலிபணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பணியில் உள்ளவர்கள் ஓய்வு வயது 58 என்பது 60 வயதாக்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பணி நீடிக்கப்பட்டு,. அவர்களும் பெரும்பான்மை யானோர் ஓய்வு பெற்றுவிட்டனர். ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், பாதுகாவலர் , அலுவலக பணியாளர் உள்ளிட்ட பெரும்பான்மையாக உள்ள காலி பணியிடங்களை நிரப்பப்படாததால் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கப்பட்டு, வேலைப்பளு கூடுதலாகப்பட்டுள்ளது.
தங்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல முடியவில்லை ,மிகை நேரப்பணி பார்க்க நிர்பந்திக்கப்படு கின்றனர், மாதத்திற்கு இருநாள் விடுப்பு கூட மறுக்கப்படுகிறது,. வார ஓய்வு, டி.ஆர் ஓய்வு பறிக்கப்படுகிறது, இதற்கெல்லாம் அடிப்படையாக உள்ள காலி பணியிடங்களை நிரப்பப்படாததால் இருக்கின்ற தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகின்ற நிலைமை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது . இதனால் தொழிலாளர்களும், அதிகாரிகளும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசும், கழக நிர்வாகங்களும் உடனடியாக ஓட்டுனர், நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்பப்ப வேண்டும், போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும், செலவுக்கும் ஏற்படும் இடைவெளியை நிரப்ப போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்து பாதுகாக்க வேண்டும், அரசே பொறுப்பு ஏற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும், திமுக அரசு தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குடந்தை போக்குவரத்துக் கழக நிர்வாகத்தில் தொழிலாளர்களை தரக்குறைவாக பேசுவது கைவிட வேண்டும், மாதத்திற்கு இரண்டு நாள் விடுப்பு வழங்க வேண்டும், வார ஓய்வு, டி.ஆர் ஒய்வு பறிக்கக் கூடாது , மாதத்திற்கு ஒரு முறை கிளைகள் முதல் தலைமை அலுவலகம் வரை தொழிலாளர்கள் கோரிக்கைகளை கேட்க குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்த என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம் துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர். துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள் என்.சேகர்,மல்லி. ஜி. தியாகராஜன், டி.கஸ்தூரி, கே.சுந்தரபாண்டியன், டி.சந்திரன், ஆர். ரங்கதுரை, எம் .தமிழ் மன்னன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். முடிவில் பொருளாளர் சி.ராஜ மன்னன் நன்றி கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu