தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி
பைல் படம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமக தனிநபர் கடன் , சுயஉதவிகுழுக்களுக்கான சிறுதொழில்கடன், கைவினை கலைஞர்களுக்கான (விராசத்கடன்திட்டம்), கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, கடன் பெறும் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம், கடன் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றில் கீழ்கண்டவாறு தளர்வுகளை நடைமுறைப்படுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகரித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கைவினை கலைஞர்களுக்கு (விராசாத்கடன்) திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
திட்டம் 2-ன் கீழ்பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கைவினை கலைஞர்களுக்கு (விராசத்கடன்) திட்டம் 1-ன் கீழ் ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சன்று, கடன்பெறும் தொழில் குறித்த விவரம் / திட்டஅறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தஞ்சாவூர்மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி அல்லது தொலைபேசி எண். 04362-278416 மற்றும் மின்னஞ்சல் dbcwo.tntnj@gmail.com – மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடனுதவி வழங்குவதற்கான வழிகாட்டி நெறி முறைகள்: பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகளால் கடன் தொகை வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன் இது தொடர்பான அறிக்கையை குழுவிற்கு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அனுப்பவேண்டும். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத் திட்டங்களுக்காக மாவட்ட மைய கூட்டுறவு வங்கிகளில்பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள நிதி நிலையினைத்தெரிவித்து அக்கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் மாவட்டக்குழுவிற்கு காலமுறை அறிக்கை அனுப்புவதுடன் அதன் நகலை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கும் அனுப்ப வேண்டும்.
கடன் தேவை குறித்து மாவட்டஆட்சியரிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டதும் மாவட்ட மைய கூட்டுறவு வங்கிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு தேவைப்படும் நிதியினை மாற்றம் செய்வதுடன் இதுபற்றி தமிழ்நாடுசிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்குத் தகவல் தெரிவிக்கும். இக்கூட்டுறவு வங்கிகள் தங்கள் சொந்த நிதியைக் கூட சிறுபான்மையினரின் கடன் திட்டங்களுக்கு தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் வரைமுறைகளின்படி பயன்படுத்தி விட்டு மாவட்ட ஆட்சியர் / குழுத் தலைவரின் இசைவுடன் மாவட்ட மையக் கூட்டுறவு வங்கிகளிலிருந்து அதற்கீடான தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
கணக்குளைச் சரியாகப் பராமரிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கிகள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்குப் படிவம் அனுப்புவதுடன் நடப்பிலுள்ள வழக்கப்படி ஒப்பந்த அறிக்கையிலும் கையெழுத்திட வேண்டும்.கூட்டுறவு வங்கிகளுக்கு மாற்றப்பட்ட தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக நிதி தொடர்பாக அவ்வங்கிகளால் மேற்காணும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் திருப்திப்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்குக் கடன்தொகையைத் திருப்பிச் செலுத்துவதைப் பொறுத்தவரை அரசுஆணை வரைமுறைகள் / நிபந்தனைகள் மற்றும் அக்கழகக் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்த கழகத்தின் தற்போதைய நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும். கடன் வழங்கும் வங்கிகளிடமிருந்து படிவம் மற்றும் ஒப்பந்த அறிக்கை பெறப்பட்டவுடன் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன்தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கால அட்டவணையைத் தீர்மானிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu