சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் ஏஐடியுசி மனு

சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் ஏஐடியுசி மனு
X

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு பூக்கள், வளையல் விற்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் ஏஐடியூசி சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது

பூக்கள், வளையல் விற்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் ஏஐடியூசி சார்பில் மனு அளிக்கப்பட்டது

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பு பூக்கள், வளையல் விற்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் ஏஐடியூசி சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையம் முன்புறமும், எதிர் புறமும் பூக்கள், பழங்கள், வளையல், மணி உள்ளிட்ட சிறு, சிறு பொருட்களை விற்று வியாபாரம் செய்யும் தெருவோர தொழிலாளர்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அங்கு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் அன்றாட தேவைகளுக்காகவும், குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு குடும்பம் சார்ந்த பல்வேறு செலவினங்களுக்காக தங்கள் பிழைப்பின் மூலம் சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்தி வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது தஞ்சை பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்ட பிறகு பேருந்து நிலையம் முன்பும், எதிர்புறமும் பூக்கள் மற்றும் சிறு சிறு பொருட்கள் வியாபாரம் செய்யும் தெருவோரத் தொழிலாளர்களை தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் அங்கு வியாபாரம் எதுவும் செய்யக்கூடாது என்றும் ,அந்த இடத்திலிருந்து விரட்டுவதுடன், அவர்கள் விற்கும் பொருட்களை தரையில் வீசி எறிந்து, வளையல், மணி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வது, தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்துவது உள்ளிட்ட செயல்களை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியும் ,அவர்களை அந்த இடத்திலேயே வியாபாரம் செய்து அனுமதிக்க வேண்டியும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரிடம் நேரடியாக ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்ட பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தெருவோர தொழிலாளர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் இந்த செய்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் அடாவடித்தன நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டியும், அவர்களிடமிருந்து பாதுகாப்பு அளித்திட வேண்டியும் ஏ ஐ டி யூசி தஞ்சாவூர் மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்க சார்பில் இன்று காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ராவிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில் பேருந்து நிலையம் முன்புறமும், எதிர் புறமும் அவர்கள் ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து பூக்கள், வளையல், மணி, பழங்கள் உள்ளிட்டசிறு சிறு பொருட்கள் விற்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு தெரு வியாபார பாதுகாப்பு சட்டம் பிரிவு 3 இன் கீழ் அவர்களை அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் வியாபாரம் செய்யும் இடத்தில் இருந்து விரட்டக் கூடாது.

யார்,யார் எந்த இடத்தில் வியாபாரம் செய்வது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் வணிக குழுவிற்கு உள்ளதால் உடனடியாக வணிக குழு தேர்தல் நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். பி முத்துக்குமரன் தலைமையில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், தரைக்கடை சங்க நிர்வாகிகள் கண்ணன், சத்யா, வெண்ணிலா, பிரசாந்த் , வெங்கடேஷ் உள்ளிட்டார் கூடுதல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!