தஞ்சையில் காவிரி இலக்கியத் திருவிழாவை தொடக்கி வைத்த கல்வி அமைச்சர்

தஞ்சையில் காவிரி இலக்கியத் திருவிழாவை தொடக்கி வைத்த கல்வி அமைச்சர்
X

தஞ்சையில் நடைபெற்றகாவிரி இலக்கியத் திருவிழாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி இன்று தொடக்கி வைத்தார் 

காவிரி இலக்கியத் திருவிழா இன்றும் நாளையும் சரஸ்வதி மகால் , சங்கீதமகால் என 2 அரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் சரஸ்வதி மஹாலில் தமிழக அரசு பொது நூலகத் துறை,பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2023 காவிரி இலக்கியத் திருவிழாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று (18.03.2022) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: தமிழ் மொழியின் செழுமையினையும், நமது மரபு, பண்பாடு, கலை மற்றும் வரலாற்றினை போற்றிடவும் இவற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் பொது நூலக இயக்க்கம் வாயிலாக தமிழகத்தில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில் நான்கு இலக்கியத் திருவிழாக்களும் ,சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் முதல் நிகழ்வாக பொருநை இலக்கிய திருவிழாவானது பல இலக்கிய ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட திருநெல்வேலியில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய இரு நாட்களும் இரண்டாவது நிகழ்வாக, சென்னை இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 06.01.2023 முதல் 08.01.2023 வரை மூன்று நாட்களும் 100 இலக்கிய ஆளுமை களுடனும் மூன்றாவது இலக்கியத் திருவிழாவான சிறுவாணி இலக்கியத் திருவிழா 25.02.2023 மற்றும் 26.02.2023 ஆகிய இரு நாட்கள் கோயம்புத்தூரிலும் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய தினம் தமிழ்நாட்டின் பெருமை மிகு, சிறப்பு மிகு நதிகளில் என்றும் இளமையும் வளமையும் கொண்ட பொன்னி என சிறப்பு பெற்ற காவிரி நதியினைப் போற்றிடும் வகையில்,காவிரி நதிக்கரை மக்களின் பண்பாட்டினை நினைவு கூறும் வகையில் அது சார்ந்த இலக்கியம், வாசிப்பு என அறிவார்ந்த பரப்பில் பல ஆளுமைகள் கொண்டு கொண்டாட்டமாக காவிரி இலக்கியத் திருவிழா இன்றும் நாளையும் தஞ்சையில் சரசுவதி மகால் நூலகத்தில் சரஸ்வதி மகால் மற்றும் சங்கீதமகால் என இரண்டுஅரங்குகளில் கொண்டாடப்பட்டுவருகிறது.

இவ்விழாவானது இலக்கியங்களை படைப்பு மற்றும், பண்பாட்டினை மையப்படுத்தி படைப்பரங்கம் மற்றும் பண்பாட்டு அரங்கம் என இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி மகாலில் படைப்பு அரங்க நிகழ்வுகளும், சங்கீத மகாலில் பண்பாட்டு நிகழ்வுகளும் நடைபெறும். இவ்விழாவில் 45க்கும் மேற்பட்ட இலக்கிய ஆளுமைகள் 30க்கு மேற்பட்ட தலைப்புகளில் இரண்டு நாட்களும் இலக்கிய விருந்தளிக்க உள்ளார்கள்.

இத்திருவிழாவினைப் பற்றிய விழிப்புணர்வினை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியம் மற்றும் வாசிப்பு சார்ந்த பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி என பல போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

இந்த இரண்டு நாட்கள் இலக்கிய நிகழ்வுகள் முழுமையும் இணையவழி நேரடியாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் You tube சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு உலகெங்கும் பகிரப்படும். காவிரி இலக்கியத் திருவிழா தமிழகத்தின் கலை, பண்பாட்டு மற்றும் மரபினை பிரதிபலிக்கும் விழாகவாக அமையும். இவ்விழாவில் நூலக நண்பர்கள், வாசகர்கள் , திரளான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு),டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்),தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் .சண் ராமநாதன்,மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணைமேயர் மரு. அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் க.எழிலன், சரஸ்வதி மஹால் நூலகம் நிர்வாக அலுவலர் மு. முத்தையா, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து, முத்துக்குமார் மற்றும் அனைத்து துறை அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!