சாலைகளில் கழிவு நீர்; பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்

சாலைகளில் கழிவு நீர்; பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
X

பேராவூரணி சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்.

பேராவூரணி சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பகுதிகளில் கடந்த பல மாதங்களாக நகரின் மையப் பகுதிகளில், அதாவது ஆவணம் சாலை, சேதுபாவசத்திரம் சாலை, பஸ் ஸ்டாண்ட் சாலை என நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது.

ஒரு பக்கம் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், மறுபுறம் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் இந்த கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாகி, பொதுமக்கள் மர்மக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கழிவுநீரை அப்பறப்படுத்த பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் கூறுகையில், மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடை பெறுகிறது. இதனால், சாலையின் இருபுறமும் குழி தோண்டப்பட்டு, அது மூடப்படாமல் இருப்பதால், கடைகளின் கழிவுநீர் அதில் கலக்கப்பட்டு சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சாலைகளில் செல்லும் முதியோர்கள் மற்றும் பெண்கள் கீழே விழும் நிலை ஏற்படுவதாகவும், சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். மொத்தத்தில் பேராவூரணி நகர் தற்போது அலங்கோலமாக காட்சியளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே உரிய நடவடிக்கை எடுத்து நகரில், தேங்கிக்கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future