முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமிக்கு தஞ்சை டிஆர்ஓ பாராட்டு

முதல்வரின் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய  சிறுமிக்கு தஞ்சை டிஆர்ஓ பாராட்டு
X

சேமிப்பு பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார் தஞ்சாவூர் டிஆர்ஓ

மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவியின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் புத்தகங்கள் பரிசளித்து வாழ்த்தினார். மாவட்ட வருவாய் அலுவலரின் திடீர் வருகையால் மாணவி மகிழ்ச்சியடைந்தார்..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநீலகண்டன்-பாக்கியலட்சுமி தம்பதியர், இவர்களின் மகள் சாம்பவி (11) பேராவூரணியில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

திருநீலகண்டன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மின்சார விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி பாக்கியலட்சுமி தான் பார்த்து வந்த தற்காலிக ஆசிரியை பணியை விட்டுவிட்டு தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மாணவி சாம்பவி தனது தாயார் மற்றும் உறவினர்கள் அன்பளிப்பாக வழங்கும் தொகையை சேமித்து வைத்து, தனது தந்தையின் நினைவு தினத்தன்று ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 8,300 ஐ வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவை நேரில் சந்தித்து வழங்கினார்.

இவரது தாயார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால், தமிழக அரசு வழங்கிய நிவாரணத் தொகை ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்தை, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக கொடுத்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்ததோடு, கடந்த குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் பாக்கியலட்சுமியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில் தாயை போல மகளும் பிறருக்கு உதவும் சமூக நோக்கத்துடன் தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை ஆட்சியரிடம் வழங்கினார். இந்நிலையில், சனிக்கிழமை அன்று பேராவூரணி அரசு மருத்துவமனையில் நோய் நிலை கண்டறியும் மையத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன்,

மாணவி பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் தான் என்பதை அறிந்து அவரை சந்திக்க திடீரென முடிவு செய்தார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அவரது வீடு இருக்கும் இடத்தை கேட்டறிந்து, நேரடியாக அங்கு சென்று மாணவியை அழைத்து புத்தகங்களை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர் மாணவியிடம் படித்து என்னவாக வர விருப்பம் என்று கேட்டபோது, மாணவி "தான் மருத்துவராக வேண்டும். கொரோனா போன்ற பேரழிவு நோய்களுக்கு எதிராக சேவையாற்ற வேண்டும்" என தெரிவித்தார். இதைக்கேட்டு மகிழ்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், "உன் விருப்பம் போல் எல்லாம் நடைபெறும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!