தம்பிக்கு பதிலாக அண்ணனை கொலை செய்த கும்பல்

தம்பிக்கு பதிலாக அண்ணனை கொலை செய்த கும்பல்
X
போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம், புகார் கொடுத்தவரை வெட்ட வந்த கும்பல், அவரது அண்ணனை கொலை செய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள அழகிய நாயகி புரத்தைச் சேர்ந்தவர் அன்பு ரோஸ்,(45). இவர் அழகியநாயகிபுரம் பஞ்சாயத்து 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மேலும் பட்டுக்கோட்டை போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார்.

இவரது தம்பி சகாயராஜ், வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தில்லங்காட்டை சேர்ந்த லட்சுமணன் என்பவர், பைனான்ஸ் தொழில் சம்பந்தமாக சகாயராஜ் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

சகாயராஜ் மனைவி பிரியாவிடம் தவறாக பேசி, அவருடைய மொபைல் நம்பரை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகாயராஜ் மற்றும் அவரது மனைவி பிரியா இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சேதுபாவாசத்திரம் போலீசில் லெட்சுமணன் மீது புகார் அளித்து விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

புகார் கொடுத்ததை அறிந்து கொண்ட லெட்சுமணன் அவரது நண்பர்கள் 6 பேர் டூ விலரீல் வந்து, சகாயராஜ் அவரது மனைவி பிரியா ஆகிய இருவரையும் வழிமறிக்க முயற்சித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட இருவரும் வேறு வழியில் சென்று தப்பி வீட்டிற்கு வந்தனர்.

ஆத்திரமடைந்த லட்சுமணன் கும்பல் அவரது வீட்டிற்குச் சென்று தேடியுள்ளனர். அப்போது அங்கு இருந்த அவரது அண்ணன் அன்புரோஸ்சிடம் லெட்சுமணன் தகராறு செய்து, அன்புரோஸை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் படுகாயமடைந்த அன்புரோஸை உறவினர் மீட்டு, அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற லெட்சுமணன் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்நிலையில், குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதனம் செய்தனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த அன்புரோஸ்க்கு லீலாஜோஸ்பின் என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!