மருந்து கடையில் அரிவாளால் மிரட்டி தூக்க மாத்திரை திருடிய 2 பேர் கைது
பட்டுக்கோட்டையில் மருந்துக்கடையில் அரிவாளைக்காட்டி தூக்கமாத்திரைகளை திருடியதால் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்
மருந்து கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி, தூக்க மாத்திரைகளை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சின்னையா தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மருந்துக்கடையில் இரண்டு இளைஞர்கள் மருத்துவர் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஊழியர்கள் மருத்துவர் சீட்டு இல்லாமல் மாத்திரை தர முடியாது என கூறியுள்ளனர். அப்போது, ஒரு வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளுடன் கடைக்குள் சென்றுள்ளார். பணியில் இருந்த பெண் ஊழியர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
அந்த சமயத்தில் தூக்க மாத்திரைகளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். பெண் ஊழியர்களின் அலறல் சப்தம் கேட்டு வந்த மற்ற ஊழியர்கள், இளைஞர்களை விரட்டி சென்றனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகி விட்டனர். இது குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணனிடம் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி விரைந்து சென்று, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டார். அப்போது அதே சின்னையாதெருவில் வாலிபர் ஒருவர் சாலையில் ஏதோ தேடுவதுபோல் இருந்தார். அந்த வாலிபர் அணிந்திருந்த சட்டை சிசிடிவி காட்சியில் பார்த்த சட்டை போன்று இருந்ததால், போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், மற்றொரு வாலிபரையும் போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் (20), பட்டுக்கோட்டை தச்சத்தெருவை சேர்ந்த ராஜேஷ் (19) என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாளையும், மாத்திரையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் மற்றும் காவலர்களை, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிபிரியா பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu