5சத தட்டை பயிறு கரைசல் நெல் மற்றும் உளுந்து உற்பத்தியை பெருக்கும்
பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள்.
5சத தட்டைபயிறு கரைசல் பயன்படுத்தி உளுந்து உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று தஞ்சாவூர் சூழலியல் ஆய்வு மைய செயலாளர் கலைவாணன் தெரிவித்தார்.
விவசாய பயிற்சி :
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் புலவஞ்சி கிராமத்தில் 30 நெல் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு,நெல் பயிரில் உற்பத்தியை பெருக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் பொருட்டு விதை தொடங்கி அறுவடை வரை அனைத்து தொழில் நுட்பங்களும் வயல்வெளியில் நேரடியாக 6 வகுப்புகளாக நடத்தப்பட்டது.
பயிற்சியில் கலந்து கொண்ட 30 விவசாயிகளும் 5 பேர் கொண்ட ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மண் மாதிரி எடுத்தலின் முக்கியத்துவம், யூரியா சூப்பர்,பொட்டாஷ் போன்றவற்றை குறைத்து,இயற்கையான ஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம் டீ கம்போஸர் போன்றவைகளை பயன்படுத்துவதற்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இயற்கை விவசாயம் :
மேலும் விவசாயிகள் தாமே இயற்கை உரங்கள் மற்றும் பயிர்வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தி செய்தல் மற்றும் பூச்சி மருந்து இன்றி மஞ்சள்வண்ண அட்டை பயன்பாடு,திரவ உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் நெல் நுண்ணூட்டம் பயன்படுத்தும் முறை போன்றவைகள் பற்றி தஞ்சாவூர் சூழலியல் மைய செயலாளர் கலைவாணன், வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி,வேளாண் உதவி அலுவலர் சுரேஷ், அட்மா திட்ட அலுவலர் சுகிர்தா ஆகியோர் ஒவ்வொரு குழுவிற்கும் செயல் விளக்கம் அளித்தனர்.
தஞ்சாவூர் சூழலியல் மைய செயலாளர் கலைவாணன் நெல் விதைப்பு மற்றும் நடவு செய்ய வேண்டிய நாட்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். பின்னர் பேசிய, வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்தி பொறிவண்டு, ஊசித் தட்டான், நீர்தாண்டி, நீர்மிதப்போன், குளவிகள் போன்றவை எவ்வாறு தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றன என்பதையும் விளக்கினார்.
இயற்கை முறையில் பூச்சி ஒழிப்பு :
வயல் வெளியிலும் விவசாயிகளை அழைத்துச் சென்று விளக்கிக் கூறினார். கருவுற்ற சிலந்திகளை விவசாயிகள் தாமே தீமை செய்யும் புழுக்கள் உள்ள பாக்ஸ்களில் இடலாம். 12 நாட்களுக்குள் தாய் சிலந்தியிலிருந்து 300 சிலந்தி குஞ்சுகள் வரை உற்பத்தி செய்து வயலில் ஆங்காங்கே வெளியிடலாம். ஒரு எக்டருக்கு இவ்வாறு 1500 சிலந்திகள் வரை வெளியிடுவதன் மூலம் இயற்கையான முறையில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.
தட்டைப்பயறு கரைசல் :
அதைத்தொடர்ந்து கலைவாணன், இயற்கையான பயிர் வளர்ச்சி ஊக்கி ஆன 5 சத தட்டைபயிறு கரைசலை பயன்படுத்தி உளுந்து பயிரில் விதை நேர்த்தி செய்து மிகக் குறைந்த செலவில் நெல் மற்றும் உளுந்து உற்பத்தியை பெருக்கலாம். அதற்கு 100 கிராம் தட்டை பயிரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீரை வடித்து பின் ஈரத்துணியில் முளைக்கட்ட வைக்க வேண்டும். முளைகட்டிய தட்டைப்பயிரினை 100 மில்லி ஐஸ் கட்டியுடன் அரைத்து கூழ் ஆக்கிய பின் நாம் விதைக்கவுள்ள நெல் விதை அல்லது உளுந்து விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் களத்தில் விதைகளின் முளைப்பு திறன் அதிகரிப்பதோடு பச்சையம் அதிகரிக்க செய்கிறது. மிக எளிய முறையில் 5 சத தட்டைபயிறு கூழானது நெல் மற்றும் உளுந்து உற்பத்தியை அதிகரிக்க உதவி செய்கிறது.
எனவே, விவசாயிகள் இந்த எளிய முறைகளை பின்பற்றி அதிக மகசூல் எடுக்க வேண்டுமெனவும் நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடியில் செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிறு விதை உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெகஜோதி மற்றும் செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu