கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தில் பெண் விவசாயிகள்
கோடையில் பெய்யும் பெருமழைக்கு பயிர்களை பாதுகாத்துக்கொள்வதில் விவசாயிகள் முனைப்புக்காட்டவேண்டும் என்று வேளாண்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பத்து தினங்களில்10 நாட்களில் வரலாறு காணாத அளவில் கோடை மழை பெய்ய உள்ளதாக வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் உறுதி செய்கின்றன.
தஞ்சையில் சாகுபடி நிலை
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 12000 ஏக்கர் பரப்பில் அறுவடை நிலையில் கோடை நெற்பயிரும், 40,000 ஏக்கர் முன்குறுவை இளம் நடவு நெற்பயிரும், 10000 ஏக்கர் அறுவடை நிலை உளுந்து பயிரும், 5000 ஏக்கர் வளர்ச்சி பருவத்தில் உள்ள எள்ளு பயிரும், 600 ஏக்கர் வளர்ச்சி நிலை நிலக்கடலை பயிரும், 2000 ஏக்கர் வாழையும், 3000 ஏக்கர் பல வகையான காய்கறி கீரை வகைகள், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
வடிகால் வசதி செய்ங்க
இவ்வாறு பெருமழை போன்ற இயற்கை இடர்கள் நேரிடும் பொழுது வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நேரிடையாக முதல் பாதிப்பிற்கு ஆளாகின்றன. நெற்பயிரைத் தவிர ஏனைய அனைத்து பயிர்களும் கடும் மழைப்பொழிவையும் மழைநீர் வயல்களில் தேங்குவதையும் தாங்க இயலாதவை. எனவே மாற்றுப் பயிர்களான எள்ளு, உளுந்து, நிலக்கடலை, காய்கறிகள், கீரை வகைகள், வெள்ளரி தர்ப்பூசணி ஆகியவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் அவசரகதியில் வடிகால் வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளூர் நிர்வாகத்தின் உதவி
ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் மூலம் முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த ஊராட்சி மன்றங்களின் மூலம் வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் கண்ணி வாய்க்கால் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறையுடன் தொடர்பில் இருங்க
மேலும் வேளாண்மை பொறியியல் துறை, மற்றும் பொதுப்பணித்துறைநீர் ஆதார அமைப்பு ஆகிய அமைப்பு அலுவலர்களுடன் அந்தந்த கிராமத்தின் முக்கிய விவசாயிகள் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் கிராமத்தின் ஒட்டுமொத்த பரப்பளவு மற்றும் பயிர் சாகுபடி ஆகியவற்றை தெளிவாக எடுத்துக்கூறி விண்ணப்பங்களும், மனுக்களும் தயாரிக்கப்படவேண்டும்.
அதன்மூலம் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டி, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் நீர் ஆதார அமைப்பு அலுவலர்களிடம் சமர்ப்பித்து மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றிற்கும் மேலாக, மிக அவசர அவசியமாக, மழைநீர் வடிவதை தடுக்கும் தடங்கல்களை நீக்க வேண்டிய இடங்களை விவசாயிகள் அடையாளம் கண்டால், உடனே தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேல் நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை கேட்டுப் பெற வேண்டும்.
இதை செய்யாதீங்க
தற்போது மேலுரமான யூரியா மற்றும் கலப்பு உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். கோடை பெரும் மழை முடிவடைந்த பின்னர் சாகுபடி பணிகளை தொடர்ந்து செய்து கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் உளுந்து, எள்ளு, நிலக்கடலை, காய்கறி பயிர்கள் போன்ற மாற்றுப் பயிர்களுக்கான பயிர் காப்பீட்டு திட்டங்களில், நமது அருகாமை மாவட்டங்களைப் போன்று, பெருமளவில் விவசாயிகள் பதிவு செய்து கொண்டு இயற்கை பேரிடர்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு சுஜாதா அறிவிக்கின்றார். தொடர்புக்கு 9952419768 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu